தாம்பரம், :தாம்பரம் நகர மக்களின் வசதிக்காக, மாநகராட்சி சார்பில், காவல் நிலையத்தை ஒட்டி, 40 ஆண்டுகளுக்கு முன், ஓட்டு கட்டடத்தில் அம்பேத்கர் திருமண மண்டபம் கட்டப்பட்டது.குறைந்த கட்டணம் என்பதால், பல்வேறு சுப நிகழ்ச்சிகள் நடத்தி, மக்கள் பயனடைந்தனர். அரசு நிகழ்ச்சிகள், அரசியல் கூட்டங்கள், விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள்கூட நடந்தன.கடந்த 2015ல், பல வசதிகளுடன் 2 கோடி ரூபாய் செலவில் புதிதாக சீரமைக்கப்பட்டது. தனியார் திருமண மண்டபங்களுக்கு ஈடுகொடுக்கும் வகையில் மேம்படுத்தப்பட்ட இம்மண்டபத்திற்கு, 60,000 ரூபாய் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டது. இதையடுத்து மண்டபத்திற்கு, பெரியளவில் கிராக்கி ஏற்பட்டது.மண்டபம் கிடைக்கும் தேதிக்காக காத்திருந்து நிகழ்ச்சிகளை நடத்தும் சூழலும் உருவானது. அ.தி.மு.க., ஆட்சியின் போது, இம்மண்டபத்தை பராமரிக்கும் பணி, அக்கட்சியை சேர்ந்த ஒருவருக்கு வழங்கப்பட்டது.அவர் முறையாக பராமரிக்காததால், இம்மண்டபம் நாசமானது. 600 இருக்கைகள், 100 இருக்கைகளாக குறைந்தன. விளக்குகள் முறையாக எரியவில்லை. பல மின்விசிறிகள் ஓடவில்லை.மணமகன், மணமகள் அறைகளில் உள்ள கட்டில்கள் உடைந்தன. 'ஏசி' முறையாக இயங்கவில்லை. வெளியில் இருந்து பாத்திரம் உள்ளிட்ட பொருட்களை வாங்கி வந்து நிகழ்ச்சி நடத்த வேண்டிய நிலை இருக்கிறது.செயல்பாட்டில் உள்ள இம்மண்டபத்தை புதுப்பிக்க வேண்டும் என, மாநகராட்சியிடம் பயனாளிகள் புகார் அளித்தனர்.இந்நிலையில், இம்மண்டபத்தை புதுப்பித்து, மேம்பாட்டு பணிகள் விரைவில் துவங்கவுள்ளன. இதற்காக, 25 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு உள்ளது.நுழைவு வளைவு மாற்றம், கேட் அகலம், புதிய விளக்குகள் பொருத்தம், 'ஏசி'கள் பழுதுபார்ப்பு, புதிதாக 750 இருக்கைகள், சமையல் பாத்திரங்கள் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளன. இரு மாதங்களில் இப்பணி முடிக்க உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.