உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / சென்னை / பழமையான மரங்கள் அகற்றம் இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி

பழமையான மரங்கள் அகற்றம் இயற்கை ஆர்வலர்கள் அதிருப்தி

சென்னை, மழைநீர் வடிகால் திட்டத்திற்காக, 35 ஆண்டுகளுக்கு மேல் பழமையான மரங்கள் அகற்றப்பட்டதாக இயற்கை ஆர்வலர்கள், நலச்சங்கத்தினர் கடும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். இனி, மரங்களை வெட்டாமல் திட்டங்களை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை முதல்வர் தனிப் பிரிவு, மாவட்ட கலெக்டர் உள்ளிட்டோருக்கு மனு அளித்துள்ளனர்.சென்னை மாநகரட்சியின் ஆலந்துார் மண்டலம், நங்கநல்லுார் பகுதியில் கடந்த ஆண்டு பருவமழையின்போது, முதல் மற்றும் நான்காம் பிரதான சாலையை ஒட்டிய தெருக்களில் வெள்ள நீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.இப்பகுதியில் மழைநீரை வெளியேற்ற முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லாததால், இப்பிரச்னை ஏற்பட்டது. இதையடுத்து, நங்கநல்லுார், ஆதம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.அதன் ஒரு பகுதியாக, நங்கநல்லுார் நான்காவது பிரதான சாலையில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. அச்சாலையில் ஏராளமான பழமையான மரங்கள் உள்ளன. இந்நிலையில், சில நாட்களாக, சாலையில் உள்ள 35 ஆண்டுகள் பழமையான மரங்கள் உள்ளிட்ட 12 மரங்கள் அகற்றப்பட்டன.இதனால், இயற்கை ஆர்வலர்கள் மற்றும் நலச்சங்கத்தினர் அதிர்ச்சி தெரிவித்துள்ளனர். மரங்கள் அகற்றம் குறித்து, மாநகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, மாவட்ட கிரீன் கமிட்டியிடம் இந்த மரங்களை வெட்ட மூன்று மாதங்களுக்கு முன்பே அனுமதி பெற்றதாக தெரிவித்தனர்.இதையடுத்து, காவல்நிலையத்தில் புகார் அளிக்க சென்றனர். இது அரசு திட்டம் என்பதால், புகார் பெற போலீசார் மறுத்துவிட்டனர். இதையடுத்து, முதல்வர் தனிப் பிரிவு மற்றும் மாவட்ட கலெக்டருக்கு புகார் மனு அளித்தனர்.இயற்கை ஆர்வலர்கள் தரப்பில் கூறியதாவது:மழைநீர் வடிகால் திட்டம் கொண்டு வருவதை வரவேற்கிறோம். அதற்காக, 35 ஆண்டுகள் பழமை வாய்ந்த மரங்களை வெட்டிச் சாய்ப்பதை ஏற்க முடியாது.மழைநீர் வடிகால் திட்டம் செயல்படுத்தும்போது, மரங்கள் இடையில் இருந்தால் அதனை வேறோடு அகற்றி, வேறு இடத்தில் நடவேண்டும் என, விதிமுறை உள்ளது. இந்த விதிமுறையை மீறி, ஏன் மரங்களை அகற்ற அனுமதி கொடுத்தனர் என்று புரியவில்லை.சென்னை மாநகராட்சியில், சில முக்கியஸ்தர்கள் வீடுகளுக்காக மழைநீர் வடிகால் சாலையில் வளைத்துக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. ஆனால், 35 ஆண்டுகால மரத்திற்கு வளைந்து கொடுக்கவில்லை. இனியாவது மரங்களை வெட்டாமல் மழைநீர் வடிகால் கொண்டு செல்ல சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனி கவனம் செலுத்த வேண்டும்.இவ்வாறு கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்