பெருங்களத்துார், பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிகள் பேரூராட்சியாக இருந்து, தாம்பரம் மாநகராட்சியுடன் இணைக்கப்பட்டவை. தரம் உயர்த்தப்பட்டு மூன்று ஆண்டுகள் முடியவுள்ள நிலையில், இப்பகுதிகளில் வசதிகள் மேம்படுத்தப்படவில்லை என, குற்றச்சாட்டு எழுந்துள்ளது.இது குறித்து, பகுதி மக்கள் கூறியதாவது:பெருங்களத்துார், பீர்க்கன்காரணை பகுதிகளை, மாநகராட்சியுடன் இணைத்தும், எந்த முன்னேற்றமும் இல்லை. பெருங்களத்துார், 58வது வார்டு திருவள்ளுவர் தெரு, வருண் அவென்யூ, சக்தி நகர், கார்த்திகேயன் நகர்; பீர்க்கன்காரணையில் பாரதி அவென்யூ, சூரத்தம்மன் கோவில் தெரு உட்பட பல பகுதிகளில், ஏராளமான காலி மனைகள் உள்ளன.செடி, கொடிகள் வளர்ந்து புதராக காணப்படுவதால், விஷ வண்டுகள் மற்றும் பாம்புகளின் தொல்லை, அப்பகுதியில் அதிகரித்துள்ளது.இதனால், மக்கள் வெளியே வரவே அச்சப்படுகின்றனர். குறிப்பாக, குழந்தைகள் தெருக்களில் விளையாடவே பயப்படுகின்றனர். காலி மனைகளில் உள்ள புதர்களை அகற்றி சுத்தம் செய்ய, மாநகராட்சி நிர்வாகம் 15 நாட்கள் கெடு விதித்தும், உரிமையாளர்கள் கண்டுகொள்ளவில்லை.இப்பகுதிகளில் கொசு மருந்து அடிப்பதே இல்லை. கொசு தொல்லையால் பல்வேறு தொற்றுகள் பரவி வருகின்றன. கால்வாய்களை முறையாக சுத்தம் செய்யாததால், துர்நாற்றம் வீசுகிறது. புதிதாக சாலை எதுவும் அமைக்கப்படவில்லை. பலமுறை மனு அளித்தும் உரிய நடவடிக்கை இல்லை. தேவையான வசதிகளை செய்து தர, மாநகராட்சி நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.