காஞ்சிபுரம், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதி, தி.மு.க., கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கு செல்லும் என பலரும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மீண்டும் தி.மு.க.,வே நேரடியாக போட்டியிடுகிறது.இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தி.மு.க., தலைமை நேற்று முன்தினம் வெளியிட்டுள்ளது.தி.மு.க.,வின் தெற்கு மாவட்டம் சார்பில், காஞ்சிபுரத்தில் போட்டியிட வைக்க, செங்கல்பட்டு, மதுராந்தகம், திருப்போரூர் போன்ற பகுதிகளை சேர்ந்த கட்சி நிர்வாகிகள் பலர், காஞ்சியில் போட்டியிட ஆர்வம் காட்டினர். ஆனால் பெரியளவில் பண பலம், மக்கள் செல்வாக்கு இல்லாததால், பரிசீலனை நிலையிலேயே பலரது பெயர்கள் நின்றுவிட்டதாக கட்சியினர் தெரிவித்தனர்.எனவே, இத்தொகுதியில் மூன்றாவது முறையாக, 'சிட்டிங்' எம்.பி., செல்வத்துக்கே 'சீட்' வழங்கப்படும் என, தி.மு.க.,வினர் பலரும் உறுதியாக நம்புகின்றனர். மாவட்ட செயலர் சுந்தரும், அவருக்கே ஆதரவு தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.அதேபோல், அ.தி.மு.க., சார்பில், காஞ்சிபுரம் லோக்சபா தொகுதிக்குட்பட்ட காஞ்சிபுரம், உத்திரமேரூர், செய்யூர், திருப்போரூர், செங்கல்பட்டு, மதுராந்தகம் ஆகிய ஆறு இடங்களில் உள்ள ஒன்றிய, பேரூர், நகர நிர்வாகிகளில் போட்டியிட வாய்ப்புள்ளவர்கள் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது.ஆனால், செலவு செய்வதில் ஏற்பட்ட தயக்கம் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் உள்ள உட்கட்சி பூசல் போன்ற காரணங்களால் பலரது பெயர்களும் கைவிடப்பட்டன. இறுதியாக, செங்கல்பட்டு மாவட்டத்தின் புனித தோமையார் மலை ஒன்றியத்தில் உள்ள பெரும்பாக்கம் ஊராட்சியின் முன்னாள் ஊராட்சி தலைவரும், அ.தி.மு.க.,வின் அம்மா பேரவை துணை செயலருமான பெரும்பாக்கம் ராஜசேகர் என்பவரை நிறுத்த மாவட்ட அளவில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இதற்காக, காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்ட அ.தி.மு.க., செயலர்களிடம் கட்சி தலைமையும் பேசியுள்ளது. தொகுதிக்குள் தகுதியானர் இல்லாமல், வெளியிலிருந்து வேட்பாளரை களம் இறக்குவதை, காஞ்சிபுரத்தில் உள்ள அ.தி.மு.க.,வினர் புதிதாக பார்க்கின்றனர்.மரகதம், காஞ்சி பன்னீர்செல்வம் உள்ளிட்ட அ.தி.மு.க., முன்னாள் எம்.பி.,க்கள், தொகுதிக்குள் இருந்து தேர்வான நிலையில், இம்முறை தொகுதிக்கு வெளியிலிருந்து தேர்வு செய்யப்படுவது, உள்ளூர் அ.தி.மு.க.,வினர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.அ.தி.மு.க., சார்பில், பெரும்பாக்கம் ராஜசேகர் போட்டியிடுவது குறித்த விரைவில், அ.தி.மு.க., தலைமை அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.