| ADDED : நவ 17, 2025 03:21 AM
சென்னை: ஸ்ரீ சத்யசாய் பாபா 100வது பிறந்த நாள் விழாவையொட்டி, சென்னையில் இருந்து புட்டபர்த்திக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். ஸ்ரீ சத்யசாய் பாபா, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில், 1926, நவ., 23ல் பிறந்தவர். அவரது நுாற்றாண்டு பிறந்த நாள் கொண்டாட்டம், இம்மாதம் 13 முதல் 24ம் தேதி வரை, புட்டபர்த்தியில் நடக்கவுள்ளது. அவரது பிறந்த நாள் விழாவில் துணை ஜனாதிபதி ராதாகிருஷ்ணன், பிரதமர் மோடி ஆகியோர் பங்கேற்க உள்ளனர். அதேபோல், சென்னை உட்பட தமிழகத்தின் பல மாவட்டங்களில் இருந்தும், புட்டபர்த்திக்கு பக்தர்கள் செல்வர் என எதிர்பார்க்கிறது. எனவே, தமிழகம், ஆந்திரா அரசு போக்குவரத்து கழகங்கள் சார்பில், சிறப்பு பேருந்துகள் இயக்க வேண்டும் என, பக்தர்கள் எதிர்பார்க்கின்றனர். இது குறித்து, தமிழக முற்போக்கு நுகர்வோர் மைய தலைவர் ச டகோபன் கூறியதாவது: ஸ்ரீ சத்யசாய் பாபாவிற்கு லட்சக்கணக்கான பக்தர்கள் தமிழகத்தில் உள்ளனர். அவரது 100வது பிறந்த நாளில் பக்தர்கள் பங்கேற்க வசதியாக, சென்னை உட்பட பல்வேறு பகுதிகளில் இருந்து புட்டபர்த்திக்கு சிறப்பு பேருந்துகளை இயக்க தமிழகம், ஆந்திர மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.