கொருக்குப்பேட்டை: நகைப்பட்டறையில் தங்க நகைகளை திருடிய ஊழியர்கள் உட்பட நால்வரை, போலீசார் கைது செய்து, அவர்களிடம் இருந்த, 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்க நகைகளை பறிமுதல் செய்தனர். பூந்தமல்லி நெடுஞ்சாலையை சேர்ந்தவர் அரிஷ், 35; இவர், பழைய வண்ணாரப்பேட்டை, முத்தையா தெருவில் தங்க நகைகள் தயார் செய்யும் பட்டறை நடத்தி வருகிறார். இவரது பட்டறையில் வேலை செய்து வரும் ஊழியர் கார்த்திக் பேராவிடம், அரிஷ் கடந்த 7ம் தேதியன்று, தங்க கட்டிகள், தங்க நகைகளை கொடுத்து, அதை உருக்கி புதிய டிசைன் நகைகளாக செய்து தருமாறு கூறினார். பின், கார்த்திக் பேரா கடந்த 10ம் தேதி, புதிதாக தயார் செய்த தங்க நகைகளை கொடுத்துள்ளார். மீதமுள்ள, 2.30 கோடி ரூபாய் மதிப்புள்ள, 1,781 கிராம் தங்க நகைகளை, கார்த்திக் பேரா, 42, பபான் ராய், 29, நாராயண் மைடி, 19, ஆகிய மூவரும் திருடிக் கொண்டு, கடந்த 11ம் தேதியன்று தலைமறைவாகினர். இதுகுறித்து, கொருக்குப்பேட்டை காவல் நிலையத்தில் அரிஷ் புகார் அளித்தார். அதன்படி, அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமரா பதிவுகளை ஆய்வு செய்து, போலீசார் விசாரித்தனர். அதில், தங்க நகைகளை, கடை ஊழியர்களான மேற்குவங்கத்தை சேர்ந்த கார்த்திக்பேரா, பபான் ராய், நாராயண் மைடி ஆகியோர் திருடி சென்றதும், அந்த நகைகளை ஒடிசா மாநிலம், பத்ராக் பகுதியை சேர்ந்த பிரதன், 42, என்பவர் வைத்திருப்பதும் தெரிந்தது. அவர்களை கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த 33 லட்சம் ரூபாய் மதிப்புள்ள, 258 கிராம் தங்க நகைகளை நேற்று மீட்டனர்.