சென்னை: சென்னை கிண்டி, அம்பத்துாரில் உள்ள, 'சிட்கோ' நிறுவனத்தின் அடுக்குமாடி தொழிற்கூடங்களில், ஐ.டி., எனப்படும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களை துவக்க, தலா ஐந்து தொழில்முனைவோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். தமிழகத்தில், தகவல் தொழில்நுட்ப படிப்பு படித்த இளைஞர்களும், பெரிய ஐ.டி., நிறுவனங்களில் பணிபுரிந்தவர்களும், சொந்தமாக சிறிய அளவில் ஐ.டி., நிறுவனங்களை துவக்கி வருகின்றனர். அவர்கள், குறைந்த வாடகையில், அலுவலகத்திற்கு இடம் கிடைக்காமல் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே, தமிழக அரசின் சிட்கோ எனும் சிறு தொழில் வளர்ச்சி கழகம், சென்னை கிண்டி, அம்பத்துார், மதுரை, ராணிப்பேட்டையில் உள்ள அடுக்குமாடி தொழிற்கூட வளாகங்களில், 25 முதல் 225 இருக்கைகள் வசதிகளுடன் கூடிய அலுவலக இடங்களை, சிறிய அளவிலான ஐ.டி., நிறுவனங்களுக்கு வாடகைக்கு விட முடிவு செய்துள்ளது. முதற்கட்டமாக, கிண்டி, அம்பத்துாரில் உள்ள அடுக்குமாடி தொழிற்கூட அலுவலக இடங்களை, 30 ஆண்டுகளுக்கு குத்தகைக்குவிட, கடந்த அக்டோபரில் சிட்கோ நிறுவனம் அழைப்பு விடுத்தது. குத்தகை கட்டணமாக, கிண்டியில் சதுர அடிக்கு, 8,520 ரூபாய், அம்பத்துாரில் சதுர அடிக்கு, 10,080 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டது. இரு தொழிற் கூடங்களிலும் தொழில் துவங்க தலா ஐந்து தொழில்முனைவோர் விருப்பம் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து, சிறு, குறு, நடுத்தர தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சிட்கோ தொழில்கூடங்களில் அலுவலகத்திற்கு இடம்பெற சிறிய ஐ.டி., நிறுவனங்கள் ஆர்வம் காட்டுகின்றன. பத்து பேருக்கு மேல் வேலைவாய்ப்பு வழங்கும் நிறுவனங்களுக்கு, இடங்கள் ஒதுக்கீட்டில் முன்னுரிமை தரப்படும்' என்றார்.