| ADDED : மார் 20, 2024 12:16 AM
சென்னை, பாரிமுனையில், நடைபாதையில் வசிப்பவர் வெங்கடேசன் 32; கூலித்தொழிலாளி. இவரது மனைவி வானுமதி, 30. திருமணமாகி எட்டு ஆண்டுகளான நிலையில், இரு குழந்தைகள் உள்ளனர்.வானுமதிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாகக் கூறி, வெங்கடேசன் அடிக்கடி அவரை அடித்து வந்ததாக கூறப்படுகிறது.இதேபோல நேற்றும் தகராறு ஏற்பட்டு ஆத்திரமடைந்த வானுமதி, தன் உறவினர் வீட்டுக்குச் செல்வதாகக் கூறி, மின்சார ரயிலில் கிண்டி சென்றுள்ளார்.கிண்டி ரயில் நிலையத்தில் வானுமதி இறங்கி நடந்து சென்ற போது, பின்தொடர்ந்து சென்ற வெங்கடேசன், மீண்டும் அவரிடம் தகராறு செய்து, கத்தியால் குத்தினார்.இதில் அவருக்கு கழுத்து, கைகளில் காயம் ஏற்பட்டது. தகவலறிந்து வந்த ரயில்வே போலீசார் வானுமதியை மீட்டு, ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். இதையடுத்து, மாம்பலம் ரயில்வே போலீசார் வழக்கு பதிந்து, வெங்கடேசனை கைது செய்து விசாரித்தனர். இதில், மனைவி நடத்தையில் சந்தேகப்பட்டு, கத்தியால் குத்தியது தெரிந்தது.