| ADDED : பிப் 15, 2024 12:32 AM
கும்மிடிப்பூண்டி, கும்மிடிப்பூண்டி அடுத்த ஆரம்பாக்கம் அருகே, பாட்டைக்குப்பம் மீனவ கிராமத்தில் உள்ள பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோவிலில் நேற்று கும்பாபிஷேக விழா நடந்தது. கடந்த 12ம் தேதி கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேக விழா துவங்கியது. யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரால் கோபுர கலசத்திற்கு நேற்று கும்பாபிஷேகம் நடந்தது. தொடர்ந்து வெங்கடேச பெருமாளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஆராதனை நடைபெற்றது.கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, சுற்றியுள்ள மீனவ கிராமங்கள் சார்பில், பெருமாளுக்கு சீர்வரிசை தட்டுகள் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டன. ஆந்திர எல்லைக்கு உட்பட்ட பீமார்பாளையம் மீனவ கிராமத்தைச் சேர்ந்த முஸ்லிம்கள் 100 பேர், 20 சீர்வரிசை தட்டுகளுடன் ஊர்வலமாகச் சென்று பெருமாளுக்கு படைத்தனர். கோவில் நிர்வாகம் சார்பில், அவர்களுக்கு கும்ப மரியாதை செலுத்தப்பட்டது.பெருமாள் கோவில் கும்பாபிஷேகத்தில், மத நல்லிணக்கத்தை வலியுறுத்தும் விதமாக முஸ்லிம்கள் சீர்வரிசை கொண்டு வந்தது, அனைவரையும் நெகிழச் செய்தது.