| ADDED : நவ 13, 2025 12:52 AM
சேலையூர்: திருவண்ணாமலை மாவட்டம், அயலவாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வம், 47. இவர் குரோம்பேட்டை பணிமனை - 2ல், மாநகர பேருந்து ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் மாலை, மதுரப்பாக்கம் - தி.நகர் இடையே இயக்கப்படும், தடம் எண் - 51டி என்ற பேருந்தை ஓட்டிக்கொண்டு, தி.நகர் நோக்கி சென்றார். அகரம் சாலை, இந்திரா நகர் சிக்னல் அருகே சென்ற போது, இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேர், பேருந்து படிக்கெட்டு கம்பியை பிடித்துக்கொண்டு சென்றனர். இதை கவனித்த செல்வம், பேருந்தை நிறுத்திவிட்டு கீழே இறங்கி வந்த போது, மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பினர். பின், வேளச்சேரி பிரதான சாலை, மகாலட்சுமி நகர் பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது, எதிர் திசையில் வந்த நான்கு பேர், கல்லால் பேருந்தின் முன்பக்க கண்ணாடியை அடித்து உடைத்து விட்டு, அங்கிருந்து தப்பினர். இதில், பேருந்தில் இருந்த பயணியர் யாருக்கும், காயம் எதுவும் ஏற்படவில்லை. இச்சம்பவம் குறித்து, சேலையூர் போலீசார் வழக்கு பதிந்து, பேருந்து கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் குறித்து விசாரிக்கின்றனர்.