| ADDED : ஆக 20, 2024 11:48 PM
கோவை:டெங்கு கொசு ஒழிப்பு பணியாளர்களுக்கு, 50 கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் நேற்று வழங்கப்பட்டன.மாநகராட்சியின் ஐந்து மண்டலங்களுக்கு உட்பட்ட, 100 வார்டுகளில், 795 பணியாளர்கள் கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மழை காலங்களில் டெங்கு உள்ளிட்ட நோய் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் விதமாக, வீடு தோறும் இப்பணியாளர்கள் சென்று, 'அபேட்' மருந்து தெளித்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்கின்றனர்.கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் பற்றாக்குறையால், பணிகளில் தொய்வு ஏற்படுவதாக கவுன்சிலர்கள் புலம்புகின்றனர். இதையடுத்து, இயந்திரங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டு வருகிறது.ஏற்கனவே, 50 கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள், ஐந்து கொசு மருந்து அடிக்கும் வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. தற்போது கூடுதலாக, 50 கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்கள் மற்றும் கொசு மருந்து அடிக்கும் வாகனம் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது.இதன் வாயிலாக, வார்டுக்கு ஒரு கொசு மருந்து அடிக்கும் இயந்திரம் வழங்கப்பட்டுள்ளது. மாநகராட்சி பிரதான அலுவலகத்தில், நேற்று கமிஷனர் சிவகுரு பிரபாகரன் முன்னிலையில், மேயர் ரங்கநாயகி கொசு மருந்து அடிக்கும் இயந்திரங்களை பணியாளர்களிடம் வழங்கினார். துணை மேயர் வெற்றிசெல்வன், பொது சுகாதார குழு தலைவர் மாரிசெல்வன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.