கோவை:கடந்த 2014ல் கோவை மேயருக்கான இடைத்தேர்தலின்போது, அ.தி.மு.க.,வினருடனான மோதல் வழக்கில், பா.ஜ.,வைச் சேர்ந்த 9 பேர் விடுவிக்கப்பட்டனர்.2014ல் கோவை மேயராக இருந்த, செ.மா. வேலுசாமி ராஜினாமா செய்தார். அ.தி.மு.க., சார்பில் ராஜ்குமாரும், பா.ஜ., சார்பில் நந்தகுமாரும் போட்டியிட்டனர்.ஓட்டுப்பதிவுக்கு 2 நாளுக்கு முன்பாக, சவுரிபாளையம் பகுதியில் அ.தி.மு.க.,வினர் பணப்பட்டுவாடாவில் ஈடுபட்டதாக தகவல் வந்ததையடுத்து, பா.ஜ.,வினர் போலீசில் புகார் கொடுத்தனர்.சம்பவ இடத்துக்குச் சென்ற பா.ஜ.,வினருக்கும், அ.தி.மு.க.,வினருக்கும் இடையே, மோதல் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. சிலர் காயமடைந்தனர். வாகனங்கள் சேதமடைந்தன. இதுதொடர்பாக அ.தி.மு.க.,வினர் அளித்த புகாரை ஏற்று, பீளமேடு காவல்துறையினர் பா.ஜ.,வைச் சேர்ந்த 9 பேர் மீது வழக்குப் பதிவு செய்தனர்.இவ்வழக்கின் விசாரணையில், கோவை மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது.இதில், பா.ஜ.,வைச் சேர்ந்த தாமோதரன், கார்த்திக், சுப்பிரமணி, ராஜேந்திரன், ராஜசேகரன், சந்திரன், ரமேஷ்குமார், அசோக்குமார், ராஜகோபால் ஆகியோரை விடுவித்து, நீதிபதி தீர்ப்பளித்தார்.வழக்கில் ஆஜரான வக்கீல்களையும், விடுதலை செய்யப்பட்டவர்களையும் பா.ஜ., மாவட்ட தலைவர் ரமேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் சந்தித்து, மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.