| ADDED : ஜூலை 31, 2024 02:21 AM
சூலுார்;ஆடி கிருத்திகையை ஒட்டி, சூலுார் வட்டார முருகன் கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.ஆடி கிருத்திகை விழா, சூலுார் வட்டார முருகன் கோவில்களில் பக்தி பரவசத்துடன் பூஜைகள் நடந்தன. சூலுார் சிவன் கோவில், பொன்னாண்டாம் பாளையம் சென்னியாண்டவர் கோவில், விராலிக்காடு சென்னியாண்டவர் கோவில், சூலுார் அறுபடை முருகன் கோவில், காங்கயம் பாளையம் சென்னியாண்டவர் கோவில், சின்னியம்பாளையம் வேல்முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில், முருகப்பெருமானுக்கு அபிஷேக, அலங்கார பூஜைகள் நடந்தன. சிறப்பு அலங்காரத்தில் முருகப்பெருமான் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காங்கயம்பாளையம் சென்னியாண்டவர் கோவிலில் நடந்த திருவிளக்கு பூஜையில், ஏராளமான பெண்கள் பங்கேற்றனர். மஞ்சள் குங்குமம் மற்றும் பூக்களால் அர்ச்சனை செய்து திருவிளக்கை வழிபட்டனர். பல இடங்களில் சப்பரத்தில் திருவீதி உலா நடந்தது.