கோவை : வக்கீலை கொலை செய்த வழக்கில், தனிப்படை போலீசார், நான்கு பேரை கைது செய்தனர்.கோவை, மயிலேறிபாளையம் செல்லும் வழியில் உள்ள, வரத்தோப்பில், பண்ணை வீடு ஒன்றின் அருகே காரில் வந்திறங்கிய நபர் மற்றும் பைக்கில் வந்தவர்கள், காரை ஓட்டி வந்த ஒருவரை வெட்டிக் கொலை செய்தனர். கொலையாளிகளை பிடிக்க எட்டு தனிப்படைகள் அமைக்கப்பட்டன.விசாரணையில் கொலை செய்யப்பட்டவர், சரவணம்பட்டி, செந்தோட்டம், காடைஈஸ்வரர் கார்டனைச் சேர்ந்த வக்கீல் உதயகுமார், 48 எனத் தெரிந்தது. இந்நிலையில், இக்கொலை தொடர்பாக, நான்கு பேர் நேற்று கைது செய்யப்பட்டனர். மாவட்ட எஸ்.பி., பத்ரிநாராயணன் கூறியதாவது:ரத்தினபுரியை சேர்ந்த அய்யனார், 26, கவுதம், 20, அருண்குமார், 26 மற்றும் அபிஷேக், 20 ஆகியோர் கொலையில் ஈடுபட்டது தெரிந்தது. பைனான்ஸ் நிறுவனத்தில் 'கலெக்சன் ஏஜென்ட்' ஆக பணிபுரியும், அய்யனாருக்கும், வக்கீல் உதயகுமாருக்கும் பழக்கம் இருந்துள்ளது. வக்கீல் உதயகுமார், இடம் வாங்கி விற்றால், அதிக லாபம் சம்பாதிக்கலாம் என அய்யனாரிடம் தெரிவித்துள்ளார். அவரிடம் ரூ.30 லட்சத்தை கடந்த பிப்., மாதம் அய்யனார் கொடுத்துள்ளார். ஆனால், கூறியபடி உதயகுமார் பணத்தை தரவில்லை.இதுகுறித்து கேட்ட போது, பல சமயங்களில் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, அவரை அய்யனார் தனது நண்பர்களான, கவுதம், அருண்குமார், அபிஷேக் ஆகியோருடன் இணைந்து, கொலை செய்தார். அய்யனார் மீது மட்டும் ஏற்கனவே வழக்கு உள்ளது. மற்ற மூவர் மீது வழக்குகள் இல்லை. இவர்கள் கூலிப்படையை சேர்ந்தவர்கள் அல்ல. கொலை செய்த பின், நான்கு பேரும் தப்பிய கார் மற்றும் பைக்குகள் பறிமுதல் செய்யப்பட்டன. கொலை நடந்த பின், அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கொலை நடந்த, 12 மணி நேரத்தில் கொலையில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டனர்.இவ்வாறு, அவர் கூறினார்.