கோவை, : கோவையின் பல்வேறு பகுதிகளிலும் நேற்றும் தொடர்ந்து மழை பெய்தது.கோவை மக்கள் முன் எப்போதும் இல்லாத அளவிலான வெயிலை சந்தித்து வந்தனர். அனைவரும் கோடை மழைக்காக காத்திருந்தனர். இந்நிலையில் கடந்த, 7 ம் தேதி முதல் கோவை மாவட்டத்தில் பரவலாக அனைத்து பகுதிகளிலும், மழை பொழிவு இருந்து வருகிறது.நேற்று காலை முதல், மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும், வானம் மேகமூட்டத்துடன் இருந்தது. மாலை, 5:00 மணிக்கு மேல் கோவை, காந்திபுரம், கணபதி, சுந்தராபுரம், உக்கடம், பீளமேடு, சிங்காநல்லுார், ராமநாதபுரம், மதுக்கரை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. நேற்று முன்தினம் நிலவரப்படி, 24 மணி நேரத்தில், அதிகளவாக, பொள்ளாச்சி மாக்கினாம்பட்டியில், 51 மி.மீ., அதற்கு அடுத்தபடியாக கோவை சூலுாரில், 40 மி.மீ., மழை பொழிவு பதிவானது.கோவை மாநகரை பொறுத்தவரை, விமான நிலையத்தில், 22 மி.மீ., கோவை தெற்கு தாலுகா அலுவலகம், 12 மி.மீ., வேளாண் பல்கலை, 11 மி.மீ., மழைப்பொழிவு பதிவானது.தொடர்ந்து இன்னும் இவ்வாரத்தில் மழைப்பொழிவு இருக்கும் என, வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.தொண்டாமுத்தூர் வட்டாரத்தில், நேற்று மாலை, கனமழை பெய்தது. பேரூர் செட்டிபாளையம் ஊராட்சிக்குட்பட்ட பச்சாபாளையம், சிறுவாணி மெயின்ரோடு, காந்தி காலனியில், சுமார், 150 குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதியில், மழைநீர் வடிகால் ஆழமில்லாமல் உள்ளதால், கழிவுநீர், வீடுகளுக்குள் புகுந்தது. இதனால், வீட்டிற்குள் இருக்க முடியாமல், பொதுமக்கள் சிரமத்திற்குள்ளாகினர். அதன்பின், அப்பகுதி மக்கள், மழைநீர் வடிகாலில் இருந்த அடைப்புகளை அகற்றி, கழிவுநீரை வெளியேற்றினர். இப்பகுதியில், மழைக்காலங்களில், இந்த பிரச்னை தொடர்ந்து வருகிறது. ஆனால், அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை என, பொதுமக்கள் புகார் தெரிவித்தனர்.