| ADDED : ஜூலை 10, 2024 02:01 AM
சூலுார்;மத்திய அரசின், 'கிசான் சம்மான்' நிதி பெறும் திட்டத்தில், விவசாயிகளின் கருவிழிகள் பதிவு செய்யும் முறை அமல் படுத்தப்பட்டுள்ளது. நாடு முழுவதும் பிரதமரின் கிசான் சம்மான் நிதி திட்டம், 2019 பிப்., முதல் அமல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் வாயிலாக, சொந்தமாக விவசாய நிலம் வைத்திருக்கும் விவசாயிகளுக்கு, ஊக்கத்தொகையாக, மூன்று தவணைகளில், தலா 2,000 என, மொத்தம், ஆண்டுக்கு, 6,000 ரூபாய் விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக மத்திய அரசால் வரவு வைக்கப்படுகிறது. இதுவரை, 17 தவணை ஊக்கத்தொகை வழங்கப்பட்டுள்ளது. நடப்பாண்டுக்கான, தவணைத் தொகை பெற புதிய முறை அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே ஊக்கத்தொகை பெற்று வரும் விவசாயிகளின் கருவிழிகளை பி.எம்.கிசான் ஆப் வாயிலாக பதிவு செய்யும் முறை தற்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு வட்டாரத்திலுள்ள மொத்த பயனாளிகளில், ஐந்து சதவீதம் பேர் தேர்வு செய்யப்பட்டு, அந்த பட்டியல் வட்டார வேளாண் அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள பயனாளிகளை நேரடியாக சந்தித்து, கருவிழிகளை பதிவு செய்யும் பணியில் வேளாண் அலுவலர்கள் ஈடுபட்டுள்ளனர்.