உடுமலை, : குடிமங்கலம் ஒன்றியத்தில், மூடிக்கிடக்கும், கற்றல் மையங்களை மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வர வலியுறுத்தியும் நடவடிக்கை இல்லாததால், மக்கள் அதிருப்தியில் உள்ளனர்.குடிமங்கலம் ஒன்றியத்தில், மகளிர் மேம்பாடு, வறுமை ஒழிப்பு, கிராம பொருளாதார மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு நோக்கங்களை உள்ளடக்கி, 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டம் 2007ல், அறிமுகப்படுத்தப்பட்டது.கிராமப்பெண்களை உள்ளடக்கிய, வறுமை ஒழிப்பு சங்கம் வாயிலாக, பல்வேறு திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அவ்வகையில், கிராமங்களில், போட்டித்தேர்வுக்கு தயாராகும், பட்டதாரிகள் மற்றும் பிறர் பயன்பெறும் வகையில், கிராம கற்றல் மையம் துவக்கப்பட்டது.இம்மையத்துக்கென, தனியாக கட்டடம் ஒதுக்கீடு செய்து, குறிப்புதவி நுால்கள், நாளிதழ்கள் வாங்கப்பட்டு, பலர் பயன்பெற்று வந்தனர்.மேலும், ஆன்லைன் வாயிலாக, வரி செலுத்துதல் ஆகியவற்றுக்கும் தேவையான வசதிகள் செய்யப்பட்டது. இம்மைய பராமரிப்பு மகளிர் சுய உதவிக்குழுவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்நிலையில், பல்வேறு காரணங்களால், இந்த மையங்கள், கடந்த சில ஆண்டுகளாக மூடப்பட்டுள்ளது. வாழ்ந்து காட்டுவோம் திட்டமும் தற்போது செயல்பாட்டில் இல்லை. ஊர்ப்புற நுாலகங்களே இல்லாத, குடிமங்கலம் ஒன்றியத்தில், கிராம கற்றல் மைய திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வேண்டும் என பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காததால் அப்பகுதி மக்கள் அதிருப்தியில் உள்ளனர். இத்திட்டத்துக்கு தொடர்ந்து நிதி ஒதுக்கி, மையங்களை பயன்பாட்டுக்கு கொண்டு வந்தால் அனைத்து தரப்பினரும் பயன்பெறுவார்கள்.