பொள்ளாச்சி;சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட வார்டுகளில், குடியிருப்பு பகுதிகளில் வளர்ந்துள்ள புற்கள், முட்புதர்களை 'புஷ் கட்டர்' வாயிலாக வெட்டி அகற்றப்படுகின்றன. சூளேஸ்வரன்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட 15 வார்டுகளில், பல்லாயிரக்கணக்கான வீடுகள் உள்ளன. கடந்த இரு மாதங்களாக, தொடர்ந்த மழையால், குடியிருப்பு வீடுகள் ஒட்டிய பெரும்பாலான நிலப்பகுதிகள், செடி, கொடிகள் வளர்ந்து, காடு போல காட்சியளிக்கிறது.இதனால், கொசு மற்றும் கம்பளிப்புழு உற்பத்தியாகி, மக்கள் அவதியடைந்து வருகின்றனர். மேலும், குடியிருப்பு வழித்தடங்கள் மற்றும் திருப்பங்களில் வாகன ஓட்டுநர்களுக்கு இடையூறு ஏற்படும் வகையில் செடிகள் வளர்ந்து நிற்கின்றன.இந்நிலையில், பேரூராட்சி வாயிலாக 'புஷ் கட்டர்' வாயிலாக, செடி, கொடிகள் மற்றும் வளர்ந்து நிற்கும் புற்கள் வெட்டி அப்புறப்படுத்தபட்டு வருகிறது. இதற்கான பணியில் ஊழியர்கள் தீவிரம் காட்டியும் வருகின்றனர்.பணியாளர்கள் கூறியதாவது: மழையால், அனைத்து பகுதிகளிலும் புதர்கள் நிறைந்து காணப்படுகின்றன. குடியிருப்புவாசிகள், சிலர், தங்களது சொந்த செலவில், அவற்றை அகற்றி வருகின்றனர்.அதேநேரம், வழித்தடம் ஓரமுள்ள செடி, கொடிகள் அகற்றும் பணியில் பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. புற்களை மண் வெட்டியால் அகற்றினால், சாலையோரம் மேடு, பள்ளம் ஏற்படும்.புஷ் கட்டரில் வெட்டினால் எவ்வித பாதிப்பும் இருக்காது; சாலையோரம் சமமாக, பசுமையாக இருக்கும்.இவ்வாறு, அவர்கள் கூறினர்.