| ADDED : மே 01, 2024 12:06 AM
பெ.நா.பாளையம்;நகராட்சிகளில் சொத்து வரி செலுத்தினால், ஐந்து சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற திட்டத்தை மே மாதம் முழுவதும் நீட்டிப்பு செய்ய வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகத்தில், 138 நகராட்சிகள் உள்ளன. இதில் நகராட்சிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் 2023 - 24ம் ஆண்டுக்கான வீட்டு வரி, தொழில் வரி, தனியார் வணிகவரி, குடிநீர் கட்டணம், காலி இட மனை வரி உள்ளிட்டவைகளை விரைந்து வசூலிக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. வரி வசூலில் நகராட்சி அதிகாரிகள் தீவிரம் காட்டி வருகின்றனர். சொத்து வரியை முழுமையாக செலுத்தும் நபர்களுக்கு ஐந்து சதவீத ஊக்கத்தொகை வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு அதன் நடைமுறை ஏப்., 30ம் தேதி வரை பின்பற்றப்பட்டது.இது குறித்தான அறிவிப்புகள் துண்டு பிரசுரங்கள் வாயிலாக, பொதுமக்களுக்கு, அந்தந்த பகுதி நகராட்சி நிர்வாகம் தெரிவித்தது.இது குறித்து, பொதுமக்கள் கூறுகையில்,' தேர்தல் பணி காரணமாக சொத்து வரி சலுகை குறித்த முறையான விளம்பரம் மற்றும் பிரசாரம் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பல்வேறு நகராட்சிகளில் வசிக்கும் நபர்கள் ஐந்து சதவீத ஊக்கத்தொகை பெற முடியவில்லை' என்றனர்.இது குறித்து, கூடலூர் நகராட்சி தலைவர் அறிவரசு கூறுகையில், ''தமிழக அரசு வழங்கிய இந்த சிறப்பு திட்டத்தை கூடலூர் நகராட்சியில் உள்ள அனைத்து பொதுமக்களும் பெற இயலவில்லை. எனவே, தமிழக அரசு சொத்து வரியை முழுமையாக செலுத்தும் நபர்களுக்கு, ஐந்து சதவீத ஊக்க தொகை வழங்கும் திட்டத்தை மே மாதம் இறுதி வரை நீட்டித்து உத்தரவிட வேண்டும்'' என்றார்.