கோவை;தேசிய அளவிலான சிலம்பப் போட்டியின் சீனியர் பிரிவில், கற்பகம் பல்கலை அணி சாம்பியன் பட்டம் வென்றது.அகில இந்திய சிலம்பம் சம்மேளனம், தமிழ்நாடு அமெச்சூர் சிலம்பம் சங்கம் சார்பில், 20வது தேசிய சிலம்ப போட்டி, கன்னியாகுமரியில் உள்ள சி.எஸ்.ஐ., அரங்கில் நடந்தது. சப்-ஜூனியர், ஜூனியர், சீனியர் ஆகியோருக்கு, கம்பு வீச்சு, கம்பு ஜோடி, கம்பு சண்டை, இரட்டைவால் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் நடத்தப்பட்ட போட்டிகளில், பல்வேறு பகுதிகளில் இருந்து 500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தமிழக அணி சார்பில் பங்கேற்ற கற்பகம் பல்கலை மாணவர்கள், 15 தங்கம், 1 வெள்ளி மற்றும் 1 வெண்கலம் என 17 பதக்கங்கள் வென்று, சீனியர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றனர். வெவ்வேறு பிரிவுகளில் வெற்றி பெற்றவர்கள்: கவுதம கிருஷ்ணன், சஞ்சய், சவுந்தர் ராஜ், தசாதரன், பெரியசாமி, மதன்பாபு, விஜய் சந்தோஷ், மும்மூர்த்தி, முத்துப்பாண்டி, கவின், ரமணி, மரியரீட்டா, ராஜம், சசிதரன், விமல் ஆகியோர் பதக்கம் வென்றனர். வெற்றி பெற்ற மாணவர்களை, கற்பகம் பல்கலையின் துணைவேந்தர் வெங்கடாசலபதி, பதிவாளர் ரவி, உடற்கல்வி இயக்குனர் சுதாகர் உள்ளிட்டோர் பாராட்டி வாழ்த்தினர்.