| ADDED : மே 23, 2024 11:18 PM
பொள்ளாச்சி;பொள்ளாச்சி அருகே, மானாம்பள்ளி வனச்சரகத்தில் யானைகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது.ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணியானது நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை மேற்கொள்ளப்படுகிறது. அதில், கடந்தாண்டு நடத்தப்பட்ட கணக்கெடுப்பில், 2,961 யானைகள் இருப்பது கண்டறியப்பட்டது. துல்லியமாக தகவல்களை கூடுதலாக பெற, இரண்டாம் கட்டமாக தமிழகம், ஆந்திரா, கர்நாடகா, கேரளா வனத்துறையுடன் இணைந்து ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்யப்பட்டது.இதன் அடிப்படையில், ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு நேற்று துவங்கியது. ஆனைமலை புலிகள் காப்பகத்துக்குட்பட்ட பொள்ளாச்சி வனக்கோட்டத்தில் உள்ள வனச்சரகங்களில், 32 பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ள உயர் அதிகாரிகள் அறிவுறுத்தினர்.அதன்படி,மானாம்பள்ளி வனச்சரகத்தில், எட்டு சுற்றுகள் உள்ளன. ஒவ்வொரு சுற்றையும், ஒரு பிளாக் ஆக பிரித்தும், தனியார் தேயிலை தோட்டப்பகுதிகளை ஒரு பிளாக்காக பிரித்தும் மொத்தம், ஒன்பது பிரிவுகளில் ஒருங்கிணைந்த யானைகள் கணக்கெடுப்பு பணி துவங்கப்பட்டது.மானாம்பள்ளி வனச்சரகர் மணிகண்டன் தலைமையில் இப்பணிகள் நடைபெறுகிறது. முதல் நாளான நேற்று, பிளாக் கவுண்ட் பணியும், இரண்டாவது நாளான இன்று நேர்கோட்டுப்பாதையில் கணக்கெடுப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.மூன்றாவது நாளான நாளை (25ம் தேதி) நீர்நிலைப்பகுதிகளில் கணக்கெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. இதுபோன்று மற்ற வனச்சரக பகுதிகளிலும் கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டுள்ளன.