| ADDED : ஜூன் 24, 2024 11:12 PM
கிணத்துக்கடவு:கிணத்துக்கடவு, ஒன்றிய அலுவலக வளாகம் செல்ல தற்காலிக ரோடு அமைக்கப்பட்டுள்ளது.கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் அருகே உள்ள ஒன்றிய அலுவலக வளாகத்தில், தாலுகா, ஒன்றியம், சமூக நலத்துறை, மகளிர் சுய உதவிக்குழு, வேளாண் போன்ற அலுவலகங்கள் உள்ளன.கிணத்துக்கடவு ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் இருந்து இங்கு வரும் மக்கள் மற்றும் அரசு அதிகாரிகள், புது பஸ் ஸ்டாண்ட் வழியாக செல்கின்றனர். மேலும், பணிகள் முடித்து 'ஒன்வே' திசையில் செல்லும் நிலை இருந்தது. இதனால் நடந்து செல்பவர்களும், வாகனங்களில் செல்பவர்களும் சிரமப்பட்டு வந்தனர்.மேம்பாலம் கட்டப்பட்டதில் இருந்து, இந்த பிரச்னை தீராத தலைவலியாக இருந்தது. இதை சரி செய்யும் நோக்கில், கடந்த வாரம் நடந்த ஒன்றியக்குழு கூட்டத்தில், தற்காலிகமாக மண் ரோடு அமைக்க சர்வீஸ் ரோட்டின் ஓரம் பாதை அமைக்கப்படும் என விவாதிக்கப்பட்டது.அதை தொடர்ந்து, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், மக்கள் நலன் கருதி முயற்சி எடுத்து கிணத்துக்கடவு புது பஸ் ஸ்டாண்ட் முதல் ஒன்றிய அலுவலகம் வரை, தற்காலிக மண் ரோடு அமைக்க செடிகள் அகற்றம் செய்யப்பட்டு ரோடு அமைக்கும் பணி நடக்கிறது. இதனால், பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்து உள்ளனர்.மேலும், இனிமேல் சர்வீஸ் ரோட்டில் பயத்துடன் பயணிக்கும் நிலை இல்லை. மாற்றாக தற்போது அமைக்கப்பட்டுள்ள பாதையை பயன்படுத்துவார்கள், என, ஒன்றிய அதிகாரிகள் தெரிவித்தனர்.