கோவை:கோவை மாவட்டத்தில், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்களாக, 76 ஆயிரத்து, 571 பேர் உள்ளனர். இவர்கள், வீட்டில் இருந்தே ஓட்டுப்பதிவு செய்ய, தபால் ஓட்டு வசதி செய்து கொடுக்கப்படும்.கோவை மாவட்டத்துக்கான இறுதி வாக்காளர் பட்டியலை, கலெக்டர் கிராந்திகுமார் நேற்று வெளியிட்டார். மொத்தம், 30 லட்சத்து, 81 ஆயிரத்து, 594 வாக்காளர்கள் உள்ளனர். 18 - 19 வயது பிரிவினர் வாக்காளர் பட்டியலில் இணைய ஆர்வம் காட்டாமல் இருந்தனர்.கல்லுாரி வளாகங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, மாணவ - மாணவியரிடம் படிவங்கள் பெறப்பட்டன. இதன்படி, புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருக்கின்றனர்.தற்போது, வயது வாரியாகவும் வாக்காளர்கள் எண்ணிக்கையை தேர்தல் பிரிவினர் வெளியிட்டிருக்கின்றனர். 18-19 வயது பிரிவில், 19 ஆயிரத்து, 593 ஆண்கள், 18 ஆயிரத்து, 340 பெண்கள், 7 மூன்றாம் பாலினத்தவர்கள் என, 37 ஆயிரத்து, 940 வாக்காளர்கள் உள்ளனர்.20-29 வயதுக்குள் - 2 லட்சத்து, 36 ஆயிரத்து, 747 ஆண்கள், 2 லட்சத்து, 32 ஆயிரத்து, 125 பெண்கள், 235 மூன்றாம் பாலினத்தவர்கள் என, நான்கு லட்சத்து, 69 ஆயிரத்து, 107 வாக்காளர்கள் இருக்கின்றனர்.30 - 39 வயதுக்குள் - 6 லட்சத்து, 40 ஆயிரத்து, 13 வாக்காளர்கள், 40-49 வயதுக்குள் - 6 லட்சத்து, 97 ஆயிரத்து, 25 வாக்காளர்கள், 50-59 வயதுக்குள் - 5 லட்சத்து, 76 ஆயிரத்து, 655 வாக்காளர்கள் இருக்கின்றனர்.60-69 வயதுக்குள் - 3 லட்சத்து, 80 ஆயிரத்து, 40 வாக்காளர்கள்; 70 - 79 வயதுக்குள் - 2 லட்சத்து, நான்காயிரத்து, 243 வாக்காளர்கள் உள்ளனர்.80 வயதுக்கு மேற்பட்டவர்களாக, 76 ஆயிரத்து, 571 வாக்காளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில், நுாறு வயதுக்கு மேற்பட்டவர்களாக, 467 பேர். 100 - 109 வயதுக்குள் - 208 ஆண்கள், 212 பெண்கள், 110 - 119 வயதுக்குள் - 17 ஆண்கள், 18 பெண்கள், 120 வயதுக்கு மேல் - 5 ஆண்கள், 7 பெண்கள் உள்ளனர். இவர்கள் அனைவரது வீட்டுக்கும் தேர்தல் பிரிவினர் சென்று உறுதிப்படுத்தி, பட்டியலில் பெயரை சேர்த்திருக்கின்றனர்.தேர்தல் பிரிவினர் கூறுகையில், 'கோவை மாவட்டத்தில் வசிக்கும், 80 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் பெயர், முகவரி பட்டியல் தனியாக சேகரிக்கப்பட்டுள்ளது. இவர்கள், வீட்டில் இருந்தே தபால் ஓட்டு போடுவதற்கு வசதி செய்யப்பட்டுள்ளது.தேர்தல் தேதி அறிவித்த பின், இவர்களது வீடுகளுக்குச் சென்று ஓட்டை பதிவு செய்ய, தொகுதி வாரியாக தனிக்குழு ஏற்படுத்தப்படும். சர்வீஸ் ஓட்டு என்ற அடிப்படையில், 615 ராணுவ வீரர்கள் இருக்கின்றனர். இவர்களும் தபால் ஓட்டுகளே பதிவு செய்ய முடியும்' என்றனர்.