கோவை : நடப்பாண்டில் தகவல் தொழில்நுட்பம், தொலைத் தொடர்பு, வங்கி, மருத்துவத்துறை உள்ளிட்டவற்றில் ஐந்து லட்ச வேலை வாய்ப்புகள் உருவாகின்றன என, கருத்தரங்கில் தகவல் தெரிவிக்கப்பட்டது. கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் தொழிற் நிறுவன ஒருங்கிணைப்பு மையமும், லான்ச்பேட் எல்.எல்.சி., நிறுவனமும் இணைந்து,'ஏக்டிவேட் 11' என்ற தலைப்பில் கருத்தரங்கை, கோவையில் நடத்தியது. இதை, கோவை அண்ணா பல்கலை துணைவேந்தர் கருணாகரன் துவக்கி வைத்து பேசியதாவது: கோவை அண்ணா பல்கலை தொழில் நிறுவன ஒருங்கிணைப்பு மையம், தொழிற்சாலை மற்றும் கல்வி நிறுவனங்களை ஒருங்கிணைத்து, மாணவர்களின் வேலைவாய்ப்பை கருத்தில் கொண்டு தொழில் நிறுவனத்தின் தேவைகளுக்கேற்ற வகையில் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறது. பல்கலைக்கு உட்பட்ட அனைத்து கல்லூரி மாணவர்களுக்காக பொதுவேலை வாய்ப்பு திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. இது தொடர்பாக ஆய்வரங்குகள், கருத்தரங்குகள் நடத்தப்பட்டுள்ளன. கோவை அண்ணா தொழில் நுட்ப பல்கலையில் கடந்த ஆண்டு பட்டம் பெற்ற 38 ஆயிரத்து 954 மாணவ, மாணவியர்களில் 25 ஆயிரத்து 439 பேர் பல்வேறு நிறுவனங்களில் பணிக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். மத்திய அரசின், தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்ப அமைச்சகத்தின் நிதி உதவியால் தகவல் தொழில் நுட்ப மேம்பாட்டு பயிற்சி மாணவ, மாணவியருக்கு அளிக்கப்படுகிறது. 'ஏக்டிவேட் 11' என்ற மனித வள கூட்டமைப்பு, பல்வேறு நிறுவனங்களை வளாக நேர்காணலுக்காக வரவழைத்து, தற்போதைய வேலைவாய்ப்பு நிகழ்வுகளையும், அதற்கு தேவையான தகுதிகளை அறிந்து கொள்ளுதல், முன்னணி நிறுவனங்களின் பிரதிநிதிகளின் வாயிலாக உள்ளாக்கப்பயிற்சி வகுப்பு நடத்துதல் ஆகிய பணிகளை செய்து வருகிறது.மத்திய அரசின் தொலை தொடர்பு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மற்றும் கோவை அண்ணா தொழில்நுட்ப பல்கலையின் தொழில் நிறுவன ஒருங்கிணைப்பு மையம் ஆகியன மாணவர்களுக்கு ஆளுமைத் திறன், பேச்சுத் திறன், பணித்துறை திட்டம் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நிர்வாகவியல் பயிற்சி வகுப்புகளை நடத்தி, மென்பொருள் நிறுவனங்களின் தேவைகளுக்கேற்ப மாணவர்களை தயார் செய்கிறது. நடப்பு கல்வியாண்டில் இறுதியாண்டு மாணவர்களில் 42 ஆயிரத்து 416 பேரில் 75 சதவீதத்துக்கு அதிகமான மாணவ, மாணவியர் வேலைவாய்ப்பு பெற முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.இவ்வாறு, துணைவேந்தர் கருணாகரன் பேசினார். தமிழ்நாடு, கேரள 'நாஸ்காம்' நிறுவன மண்டல நிர்வாகி புரு÷ஷாத்தமன், அண்ணா பல்கலை டீன் சரவணக்குமார் மற்றும் 23 நிறுவனங்களை சேர்ந்த மனிதவள மேலாளர்களும், 135 இன்ஜினியரிங் கல்லூரிகளை சேர்ந்த பிரநிதிகளும் பங்கேற்றனர்.