கோவை:'கோவை மாநகராட்சி பகுதியில், மக்களுக்கு தொந்தரவு செய்யும் வகையில், ஆமை வேகத்தில் நடக்கும் பணிகளை வேகப்படுத்த நடவடிக்கை எடுங்கள்' என, அமைச்சர் முத்துசாமியிடம், கவுன்சிலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சரான, வீட்டு வசதி வாரிய அமைச்சர் முத்துசாமி, மாநகராட்சியை சேர்ந்த தி.மு.க., மற்றும் கூட்டணி கட்சி கவுன்சிலர்களை, அரசு விருந்தினர் மாளிகையில் சந்தித்தார். அப்போது, மாநகராட்சியில் உள்ள பிரச்னைகளை கவுன்சிலர்கள் பட்டியலிட்டு கூறினர்.அப்போது, கவுன்சிலர்கள் கூறியதாவது:தி.மு.க., ஆட்சியில் மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள். மாநகராட்சி பகுதிகளில் செய்யும் பணிகளை உடனடியாக முடிக்காவிட்டாலும், வேகப்படுத்த வேண்டும்.24 மணி நேர குடிநீர் திட்ட பணிகள் மந்தமாக இருக்கின்றன. ஒரு பக்கம் தோண்டுகிறார்கள்; இன்னொரு பக்கம் மூடுகிறார்கள். சரியான லெவலில் ரோடு இல்லை.குழாய் பதிக்க, நகரில் பல இடங்களில் தோண்டப்பட்ட ரோடு படுமோசமாக இருக்கிறது; குழாய் பதித்த பின் சரியாக மூடுவதில்லை. மேல்நிலை தொட்டி இன்னும் கட்டவில்லை.புதிய ரோடுகளை தரமாக போட வேண்டும். நகரின் மையப்பகுதியில், 40 ஆண்டுகளுக்கு முன் பதிக்கப்பட்ட பாதாள சாக்கடை குழாய்களே இன்னும் பயன்பாட்டில் இருக்கின்றன.அழுத்தம் தாங்காமல் உடைப்பு ஏற்பட்டு, கழிவு நீர் பொங்குகிறது. மக்கள் தொகை, எதிர்கால தேவையை கணக்கிட்டு, தொலைநோக்கு பார்வையுடன் திட்டமிட்டு பெரிய குழாய் பதிக்க வேண்டும்.சொத்து வரியை உயர்த்தியிருக்கிறோம். குப்பைக்கும் வரி வசூலிக்கிறோம். குப்பை வரி வசூலில் முரண்பாடு இருக்கிறது. ஒரே மாதிரி சொத்து வரி செலுத்தும் இரு நிறுவனங்களுக்கு மாறுபட்ட குப்பை கட்டணம் வசூலிக்கப்படுகிறது.இதனால், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். லோக்சபா தேர்தலின்போது, குப்பை வரி பாதிப்பை ஏற்படுத்தும். அதற்கு முன்னதாக, சீராய்வு செய்ய வேண்டும்.விதிமீறல் கட்டடங்களுக்கு அபராதம் விதித்து, சொத்து வரி போடுவது வழக்கம். ஐகோர்ட் உத்தரவுப்படி, விதிமீறல் கட்டடங்களை இடிக்க ஆரம்பித்தால், அநேகமான கட்டடங்களை இடிக்க வேண்டிய சூழல் ஏற்படும். மக்கள் பெருமளவில் பாதிக்கப்படுவர்.அதனால், இனி வரும் காலங்களில், விதிமீறல் இல்லாமல் கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க உறுதியளித்து, முறைப்படுத்த வேண்டும். ஏராளமான கட்டடங்களுக்கு சொத்து வரி போடாமல், விண்ணப்பங்கள் கிடப்பில் போடப்பட்டு இருக்கின்றன.இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.