உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் / சாலையில் குரங்குகளுக்கு உணவளிக்காதீர்

சாலையில் குரங்குகளுக்கு உணவளிக்காதீர்

மேட்டுப்பாளையம்:''வனப்பகுதியில் சாலையின் ஓரத்தில் உள்ள குரங்குகளுக்கு, உணவளிப்பதை தவிர்க்க வேண்டும்,'' என வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின், மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினார். மேட்டுப்பாளையம் வி.என்.கே., மகளிர் கல்லுாரி நாட்டு நலப்பணித் திட்ட முகாம், கல்லுாரி முதல்வர் ரேவதி தலைமையில், ஓடந்துறை ஊராட்சியில், நடைபெற்று வருகிறது. இதில், 60 மாணவிகள் நாட்டு நலப்பணித் திட்டத்தின் வாயிலாக, கோத்தகிரி சாலையில் உள்ள, பிளாஸ்டிக் பொருட்களையும், காலி மது பாட்டில்களையும், அகற்றும் பணியில் ஈடுபட்டனர். மேட்டுப்பாளையம் வனச்சரக அலுவலர் ஜோசப் ஸ்டாலின், இப்பணியை துவக்கி வைத்து பேசுகையில், ''குரங்குகள், சாலையின் ஓரத்தில் உள்ள தடுப்புச் சுவற்றில் அமர்ந்து, பயணிகள் போடும் உணவுகளை சாப்பிட காத்திருக்கின்றன். இயற்கையான உணவுகளை சாப்பிடும் பொழுது, குரங்குகளுக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாது. பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்ட உணவு பொருட்களை, குரங்குகள் சாப்பிடும் பொழுது, பல்வேறு விதமான உபாதைகளால் பாதிக்கின்றன.அதனால் சாலையின் ஓரத்தில் உள்ள குரங்குகளுக்கு, தின்பண்டங்கள் மற்றும் உணவுப் பொருட்கள் போடுவதை தவிர்க்க வேண்டும். இதை பெற்றோர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். மேலும் வனப்பகுதி ஓரத்தில் உள்ள விவசாய நிலங்களில், யானைகளுக்கு பிடித்தமான பயிர்களை, பயிர் செய்வதை தவிர்க்க வேண்டும்,'' என்றார். கோத்தகிரி சாலையில், வனத்துறை சோதனைச் சாவடியில் இருந்து, மலைப்பாதை துவங்கும் இடத்த கருப்பராயன் கோவில் வரை, சாலையின் ஓரத்தில் வனப்பகுதியில் உள்ள குப்பைகளை சுத்தம் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். ஒன்றரை டன் குப்பைகளை சேகரித்து அகற்றினர். திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராதிகா, சத்திய பிரியா, அக்சயா, வனவர் முனியாண்டி, வனக்காப்பாளர்கள் ஹக்கீம், நாகராஜ், வனக்காவலர் நடராஜன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை