| ADDED : மார் 18, 2024 01:01 AM
கோவை:தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து, 108 ஆம்புலன்ஸ்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.கடந்த முறை ஆம்புலன்ஸ்களில், பணம் எடுத்துச் செல்லப்பட்டு பட்டுவாடா செய்ததாக புகார் எழுந்தது. இதையடுத்து, 108 ஆம்புலன்ஸ்களை இயக்கும் நிறுவனம் சார்பில், டிரைவர்கள், அவசரகால மருத்துவ சேவை உதவியாளர்களுக்கு, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.ஜி.வி.கே., இ.எம்.ஆர்.ஐ., நிறுவன விற்பனை பிரிவு தலைவர் பாலாஜி கூறியதாவது:ஆம்புலன்ஸில், மருத்துவ பயன்பாட்டுக்கான பொருட்கள் தவிர, வேறு எந்த பொருட்களையும் எடுத்துச் செல்லக்கூடாது.அங்கீகரிக்கப்படாத பிற நபர்களை, ஆம்புலன்ஸில் ஏற்றக்கூடாது. நோயாளியுடன் உறவினர்கள், நோயாளிகளுக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் அமர வேண்டும்.ஆம்புலன்ஸில் உள்ள வைப்பு அறைகளை நோயாளி, அவருடன் வருபவர்கள் திறக்காமல் கண்காணிக்க வேண்டும். நோயாளி, உறவினர்கள் உடமைகளை சோதிக்க வேண்டும்.தேர்தல் பிரசாரம் தொடர்பான சாதனங்களை, ஆம்புலன்சில் எடுத்துச் செல்லக்கூடாது. நோயாளிகள், உறவினர்கள், மருத்துவ ஊழியர்கள் ஆம்புலன்ஸில் எடுத்துச் செல்லும் பணம் குறித்து, முன்கூட்டியே தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.