| ADDED : நவ 25, 2025 05:51 AM
கோவை: வாசக்டமி அறுவை சிகிச்சை செய்துகொள்ள, ஆண்கள் தயங்காமல் முன்வரவேண்டும் என, குடும்பநலத்துறை துணை இயக்குனர் கவுரி வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆண்களுக்கான நவீன குடும்ப நல கருத்தடை சிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில், வாசக்டமி இருவார விழா கடைப்பிடிக்கப்படுகிறது. விழிப்புணர்வு தொடர்ந்து அளிக்கப்பட்டாலும், குடும்ப கட்டுப்பாடு அறுவைசிகிச்சை செய்யும் ஆண்களின் எண்ணிக்கை சொற்ப எண்ணிக்கையில்தான் உள்ளது. இந்த சிகிச்சை செய்யும் பெண்களுக்கு 600 ரூபாயும், ஆண்களுக்கு தனியார் பங்களிப்புடன் 3,100 ரூபாயும் உதவித்தொகை வழங்கப்படுகிறது. கோவை மற்றும் திருப்பூர் மாவட்ட குடும்பநலத்துறை துணை இயக்குனர் கவுரி கூறியதாவது: குடும்பநலத்துறையின் கீழ், வாசக்டமி அறுவைசிகிச்சையை ஊக்குவிக்கும் வகையில், இருவார விழிப்புணர்வு விழா நடக்கிறது. கடந்த ஏப்., முதல் தற்போது வரை 16 ஆண்களும், 6,281 பெண்களும் குடும்ப நலக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளனர். ஒவ்வொரு ஆண்டும், குடும்பக்கட்டுப்பாடு அறுவை சிகிச்சை செய்துகொள்ளும் ஆண்கள் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. பெண்களுக்கு இணையாக இந்த எண்ணிக்கை அதிகரிக்க வேண்டும். இச்சிகிச்சை செய்து 24 மணி நேரத்தில் வழக்கமான வேலைகளில் ஈடுபடலாம். ஒரு வாரத்தில் எடை துாக்குதல், சைக்கிளிங் போன்ற அனைத்து பணிகளிலும் ஈடுபடலாம். இவ்வாறு, அவர் கூறினார்.