கோவை: கோழிப்பண்ணை விவசாயிகள் ஒழுங்குமுறை குழு (பி.எப்.ஆர்.சி.,) ஆண்டு பொதுக்குழு கூட்டம், கோவையில் நடந்தது. பி.எப்.ஆர்.சி., தலைவர் லட்சுமணன் தலைமை வகித்தார். கூட்டத்தில், ஊட்டச்சத்து, ஆரோக்கிய உணவு, மனிதர்களுக்குத் தேவையான ஊட்டச்சத்தில் கோழியின் பங்கு, சேப்-பி சான்று, தொற்றா நோய் தவிர்ப்பு ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டது. ஒழுங்குமுறைக் குழு செயலாளர் சின்னசாமி பேசுகையில், கோழிவுக் கழிவுகளை கையாள பொள்ளாச்சி, உடுமலை, கோவை, பல்லடம் பகுதிகளுக்கு மத்தியில், பொதுவான ஓரிடத்தில், மறுசுழற்சி ஆலையை தமிழக கால்நடை பராமரிப்புத் துறை அமைக்க வேண்டும், என்றார் கோழிக் கழிவுகளை கையாள்வதற்கான மறுசுழற்சி ஆலை குறித்து, பி.எப்.ஆர்.சி., நிர்வாகிகள் மேலும் கூறியதாவது: கோழிப் பண்ணைகளில் இறக்கும் கோழிகளை, பண்ணை உரிமையாளர்கள் எரித்து விடுகின்றனர். சில்லறை இறைச்சி விற்பனைக் கடைகளின் கழிவுகள், நீர்நிலைகளில் வீசப்பட்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன. பல்லடம் பகுதியில் மட்டும் தினமும் 11 முதல் 12 லட்சம் கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. ஒரு சராசரி கோழியின் எடை, 2.3 முதல் 2.5 கிலோ வரை இருக்கும். இதில், சுமார் 550 கிராம் கழிவாக மாறும். இந்தக் கழிவுகளைக் கையாள மறுசுழற்சி ஆலை தேவை. கோழி தலை, கால், எலும்பு உட்பட இதர இறைச்சிக்கழிவுகளை உரிய நடைமுறைகளைப் பின்பற்றி உணவாக மாற்றி செல்லப்பிராணிகள், கோழிப்பண்ணை, கால்நடைகளுக்கு வழங்கலாம். சோப் தயாரிப்பதற்கான கொழுப்புகளையும் பிரித்தெடுக்க முடியும். தமிழகத்தில் ஆண்டுக்கு, 2.46 கோடி டன் கறிக்கோழிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இதில், 30 சதவீதம், கோவை, திருப்பூர், ஈரோடு பகுதியில் உற்பத்தியாகின்றன. மறுசுழற்சி ஆலை அமைக்கப்பட்டால், அது கழிவுகளைக் கையாள்வதற்கான பெரும் வாய்ப்பாக இருக்கும். கழிவுகளை வளமாகவும் மாற்றலாம். இந்த நடைமுறைக்கு தாமதமாகும் எனில், நவீன தொழில்நுட்ப வசதியுள்ள எரியூட்டும் ஆலையை அமைக்க வேண்டும். பிறகு, மறுசுழற்சி ஆலை அமைக்கலாம். கால்நடைத் துறை பரிசீலிக்க வேண்டும். இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.