| ADDED : ஜன 19, 2024 04:22 AM
கோவை : உப்புத்தண்ணீர் பிரச்னைக்கு தீர்வு காணக்கோரி, கோவை கலெக்டரிடம் கீரணத்தத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புவாசிகள் முறையிட்டனர்.கோவை கீரணத்தம் வடக்கு பகுதியில், தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட வாரிய அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இங்கு, 650 வீடுகள் உள்ளன. 100 வீடுகள் ஒதுக்கப்பட்டு, மக்கள் வசிக்கின்றனர்.இங்கு வசிப்போருக்கு இரண்டு வீட்டுக்கு, 500 லிட்டர் உப்புத்தண்ணீர் என்கிற விகிதத்தில், மோட்டார் இயக்கி, சப்ளை செய்யப்பட்டது. கடந்த வியாழக்கிழமை வரை உப்புத்தண்ணீர் சப்ளை செய்யப்பட்டுள்ளது. அதன்பின் தண்ணீர் வழங்கவில்லை.இதுதொடர்பாக, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய நிர்வாக பொறியாளர் சாந்தியிடம் முறையிட்டுள்ளனர். பின், கலெக்டர் அலுவலகம் வந்து, கலெக்டர் கிராந்திகுமாரை சந்தித்து மனு கொடுத்தனர்.பாதிக்கப்பட்ட பொதுமக்கள் கூறுகையில், 'கீரணத்தத்தில் உள்ள நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்பில் வசிக்கிறோம். கடந்த வியாழக்கிழமைக்கு பின், உப்புத்தண்ணீர் வழங்கவில்லை. மோட்டார் அறையை மூடி, சாவியை எடுத்துச் சென்று விட்டனர். 'தண்ணீரின்றி தவிக்கிறோம். கழிப்பறை கழிவுகள் செல்லும் குழாயை சேம்பருடன் இணைக்காமல் விட்டு விட்டனர். 'அதனால், கழிவுகள் திறந்தவெளியில் கிடப்பதால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டிருக்கிறது' என்றனர்.