கோவை: அரசுப் பள்ளி மாணவர்களின் கற்றல் மேம்பாட்டில், பிற மாவட்டங்களை ஒப்பிடுகையில், கோவை மாவட்டம், 'எண்ணும் எழுத்தும்' மற்றும் 'திறன்' திட்டங்களில் பின்தங்கியுள்ளது ஆய்வில் தெரியவந்துள்ளது. அரசுப் பள்ளிகளில் கற்றல் இடைவெளியைக் குறைக்கும் நோக்கில், 1 முதல் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு, 'எண்ணும் எழுத்தும்' திட்டமும், 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களின் மொழி மற்றும் கணிதத் திறன்களை மேம்படுத்த, 'திறன்' திட்டமும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. மாநிலம் முழுவதும் இத்திட்டங்களின் கீழ், மாணவர்களின் கற்றல் விளைவுகள் (லேர்னிங் அவுட்கம்) சமீபத்தில் மதிப்பீடு செய்யப்பட்டன. இதில், கோவை மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது தெரியவந்துள்ளது. ஆசிரியர்கள் கூறும் காரணம்
மாவட்டத்தில் 'திறன்' கீழ், 6 முதல் 9 வரை பயிலும், 33,405 மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சிகள் வழங்கப்பட்டன. இருப்பினும், ஆரம்பப்பள்ளி மற்றும் உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் கற்றல் நிலையில், குறிப்பிடத்தக்க முன்னேற்றம் எட்டப்படவில்லை. இந்த பின்னடைவு குறித்து ஆசிரியர்கள் சிலர் கூறுகையில், 'அசாம், ஒடிசா, பீகார் போன்ற மாநிலங்களில் இருந்து, தொழில் நிமித்தமாக வருபவர்களின் குழந்தைகள், அரசுப் பள்ளிகளில் அதிகம் சேர்க்கப்படுகின்றனர். இவர்கள், சொந்த ஊருக்கு சென்றால், 1 முதல் 6 மாதங்கள் கழித்தே மீண்டும் பள்ளிக்கு திரும்புகின்றனர். இது, மாவட்டத்தின் ஒட்டுமொத்த கற்றல் விளைவுகளை பாதிக்கிறது. பெரும்பாலான வட மாநில பெற்றோர்கள், 'இங்கு வாழ தமிழ் முக்கியம்' எனக் கூறி, தமிழ்வழிக் கல்வியைத் தேர்வு செய்கின்றனர். இதனால், 4 அல்லது 5ம் வகுப்பில் சேரும் மாணவர்களுக்குக்கூட, அடிப்படைத் தமிழ் முதலில் இருந்து கற்றுத்தர வேண்டியுள்ளது. இதுவும் கற்றல் அடைவை பாதிக்கிறது' என்றனர். தொடர்பயிற்சிக்கு உத்தரவு
கற்றலில் பின்னடைவு ஆய்வு குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி கூறுகையில், கோவையில் குறுகிய காலம் தங்கியிருப்பவர்கள்(சீசனல் மைகிரேஷன்) அதிகம். இது ஆரம்பக் கல்வியைப் பெரியளவில் பாதிக்கிறது. காலாண்டுத் தேர்வின் அடிப்படையில், இந்த மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. கற்றலில் பின்தங்கிய மாணவர்களுக்கு, தொடர் பயிற்சி வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது, என்றார்.
வடமாநில குழந்தைகள்
மட்டுமே காரணமல்ல
மாவட்டத்தில் உள்ள 1,210 அரசுப் பள்ளிகளில், 1,59,957 மாணவர்கள் பயில்கின்றனர். இவர்களில் பிற மாநில மாணவர்களின் எண்ணிக்கை 10 சதவீதத்துக்குள் இருக்கலாம். எனவே, புலம்பெயர் மாணவர்களை மட்டுமே காரணமாகக் கூறாமல், அனைத்து மாணவர்களின் கற்றல் திறன்களையும் மேம்படுத்த, ஆசிரியர்கள் மற்றும் மாவட்ட கல்வி அதிகாரிகள், தொடர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என்றும், அனைத்துப் பள்ளிகளிலும் ஆய்வுக் கூட்டங்களை நடத்தி கற்றலை மேம்படுத்த, நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், கல்வியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.