கோவை: பூங்காக்கள் வெறும் பொழுதுபோக்கு இடமாகவோ, மனதுக்கு அமைதி அளிக்கும் ஆசிரமம் போலவோ மட்டும் இருக்க கூடாது; உடல் ஆரோக்கியத்துக்கும் பயனுள்ளதாக இருக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் வழங்கிய அறிவுரை, கோவை செம்மொழி பூங்காவிலும் பிரதிபலிக்கிறது. இளைஞர்களையும் சிறுவர்களையும் கவரும் வகையில் உலக தரம் வாய்ந்த திறந்தவெளி உடற்பயிற்சி களத்தை செம்மொழி பூங்காவில் உருவாக்கி உள்ளனர். குழந்தைகளுக்கு 14,000 சதுர அடி விளையாட்டு திடல். உள்விளையாட்டு அறை. மாற்றுத்திறனாளிகள் விளையாட்டு திடல் போன்ற பொழுதுபோக்கு வசதிகளும் உண்டு. பொதுமக்கள் நடைபயிற்சி செல்ல நடைபாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. திறந்தவெளி உடற்பயிற்சி கூடம் 400 சதுர மீட்டர் பரப்பளவில் அமைக்கப்பட்டு இருக்கிறது. 15 உடற்பயிற்சி உபகரணங்கள் இடம் பெற் றுள்ளன. சைக்கிளிங் எக்யூப்மென்ட் இரண்டு, ஜாக்கிங் மெஷின் ஒன்று, ஸ்ட்ரெச்சிங் மெஷின்கள் ஏழு, வெயிட் லிப்ட்டிங் மெஷின்கள் ஐந்து உள்ளன. ஆண்கள், பெண்களுக்கு தனித்தனி பகுதிகள் பிரிக்கப்பட்டுள்ளன. விளையாட்டு துறையை கவனிக்கும் துணை முதல்வர், செம்மொழி பூங்காவின் உடற்பயிற்சி திடல்கள் தொடர்பாக பல ஆலோசனைகளை வழங்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். முதல்வராக ஸ்டாலின் பொறுப்பு ஏற்றதில் இருந்து கோவை மாவட்டத்துக்கு அரசின் கவனிப்பு வேறு லெவலில் இருப்பதாக இங்குள்ள அதிகாரிகள் கூறுகின்றனர். கோவை நகரத்தின் அடையாளத்தையே மாற்றி அமைத்துள்ள பிரமாண்ட திட்டங்கள் என அவர்கள் பட்டியல் போட்டு வாசிக்கின்றனர். ஜி.டி.நாயுடு மேம்பாலம் முதல் பல திட்டங்கள் அதில் இடம் பெற்றுள்ளன. முந்தைய அரசால் தொடங்கப்பட்டு முடியாமல் இருந்த பெரிய திட்டங்களும் இதில் அடங்கும். கோவை நகருக்கு மட்டுமின்றி, கொங்கு மண்டலம் முழுமைக்குமான பல திட்டங்களுக்காக முதல்வர் இதுவரை 15 முறை சுற்றுப்பயணம் வந்து சென்றதாக அவர்கள் தெரிவித்தனர். கோல்டுவின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை ரூ.1,791 கோடி செலவில் கட்டிய தமிழ்நாட்டின் மிக நீளமான 10.10 கி.மீ. நீள மேம்பாலத்திற்கு ஜி.டி.நாயுடு மேம்பாலம் என்று பெயர் சூட்டி திறந்து வைத்தார். 9.10.25 அன்று குறிச்சி சிட்கோ தொழிற்பேட்டையில் ரூ.126 கோடியில் அமையும் தங்க நகை பூங்காவுக்கு அடிக்கல் நாட்டினார். 30.5.21 அன்று கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக அரசு செயலர்கள் மற்றும் கோயம்புத்தூர், திருப்பூர், நீலகிரி, ஈரோடு, சேலம் மாவட்ட ஆட்சி தலைவர்களுடன் ஆய்வு செய்தார். களஆய்வும் நலத்திட்ட உதவியும் 22.11.21 அன்று வ.உ. சி மைதானத்தில் நடந்த விழாவில் ரூ.587.91 கோடியில் முடிந்த 70 திட்டங்களை திறந்து வைத்து, ரூ. 89.73 கோடி மதிப்பில் 128 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 25,123 பயனாளிகளுக்கு ரூ. 646.61 கோடி உதவிகளை வழங்கினார். 23.11.21 கொடிசியா வளாகத்தில் முதலீட்டாளர்கள் முதல் முகவரி தமிழ்நாடு மாநாட்டில் 52 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன. 19.5.22 கோவை ரெசிடென்ஸி ஹோட்டலில் தொழிலதிபர்கள் மற்றும் கூட்டமைப்பினருடன் கலந்துரையாடல் நடத்தினார். 13.3.24 பொள்ளாச்சியில் முடிந்த திட்டங்களை தொடங்கி வைத்து, புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, 19,329 பயளாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார். பொள்ளாச்சி நீர்வளத்துறையின் தலைமைப் பொறியாளர் அலுவலக வளாகத்திற்கு சி.சுப்பிரமணியம் வளாகம் என்று பெயர் சூட்டி, அங்கு காமராசர், சி.சுப்பிரமணியம், வி.கே.பழனிசாமி, பொள்ளாச்சி நா. மகாலிங்கம் சிலைகளை திறந்து வைத்தார். ஆழியாறு அணை கட்டும்போது உயிர்நீத்த தியாகிகள் நினைவு மண்டபம் திறந்து வைத்தார். இவற்றின் பயனாக கொங்கு மண்டலம் தமிழ்நாட்டின் மிகச் சிறந்த வளர்ச்சி பெற்ற மண்டலமாக திகழ்கிறது.