பொள்ளாச்சி: பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் உள்ள சில அரசு மேல்நிலைப் பள்ளிகளில், 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள், நுாலகத்திற்கு சென்று புத்தகங்களை படிப்பதற்காகவே பாட வேளை ஒதுக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், அரசு பள்ளிகள் தோறும், 6 முதல் 12ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களின் வாசிப்பு திறனை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்காக, 'புத்தக பூங்கொத்து' என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டது. அதன்படி, ஒவ்வொரு வகுப்புகளிலும், குறிப்பிட்ட தலைப்பிலான புத்தகங்கள் தொங்க விடப்பட்டன. பாட வேளை அல்லாத நேரங்களில், மாணவர்கள், இந்த புத்தகங்களை எடுத்து வாசிப்பர். ஆனால், இத்திட்டம் குறுகிய நாளே நீடித்தது. பெரும்பாலான பள்ளிகளில் சரிவர வகுப்பு நுாலகம் நடத்தப்படவில்லை. இருப்பினும் மாணவர்கள் மத்தியில் வாசிப்பு திறன் குறையக் கூடாது என்பதற்காகவே, சில மேல்நிலைப் பள்ளிகளில், இதற்கான நடவடிக்கையில் மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது. அதன்படி, 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்கள், பள்ளி நுாலகம் சென்று பல்வேறு தலைப்புகளை உள்ளடக்கிய புத்தகங்களை படிப்பதற்காக, வாரம் இரண்டு பாட வேளை வரை ஒதுக்கப்பட்டுள்ளது. அதனை கண்காணிக்கும் பொறுட்டு, சிறப்பு ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளை பொறுத்தமட்டில், 9ம் வகுப்பு வரை 'ஆல்பாஸ்' திட்டம் உள்ளது. இதனால், பெரும்பாலான மாணவர்கள், எழுத்து மற்றும் வாசிப்பு திறனில் பின்தங்கியே உள்ளனர். இதற்காக, பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி, அவர்களுக்கு உரிய பயிற்சியும் அளிக்கப்படுகிறது. தற்போது, அனைத்து பள்ளிகளிலும் நுாலகங்கள் உள்ளன. அவ்வாறு இருந்தும், கடந்த இரு ஆண்டுகளாக புதிய புத்தகங்கள், பள்ளிக் கல்வித்துறையால் அனுப்பி வைக்கப்படாமல் உள்ளது. இருப்பினும், மாணவர்களின் வாசிப்புத்திறனை அதிகரிக்க செய்ய, பழைய புத்தகங்களை உள்ளடக்கிய நுாலகங்கள் செயல்பாட்டில் உள்ளன. நுாலகத்தில் உள்ள புத்தகங்களை மாணவர்கள் படிப்பதுடன், தங்களுக்கான அறிவை வளர்த்துக்கொள்ளும் நோக்கில், வாரம் இரு பாட வேளை ஒதுக்கப்படுகிறது. இருப்பினும், குறிப்பிட்ட காலத்திற்குள் பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்கிற கடமையால், பெரும்பாலான பள்ளிகளில் இத்தகைய நடைமுறையைப் பின்பற்ற ஆசிரியர்கள் தயக்கம் காட்டுகின்றனர். இவ்வாறு, அவர்கள் கூறினர். கட்டாயமாக்க வேண்டும் அனைத்து அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆயிரம் புத்தகங்களைக் கொண்ட நுாலகம் செயல்படுவதைக் கட்டாயமாக்க வேண்டும். சில பள்ளிகளில், தன்னார்வ அமைப்புகள் வாயிலாக புதிய புத்தக ங்கள் தருவிக்கவும் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. அதற்கு மாறாக, ஒவ்வொரு காலகட்டத்திற்கு ஏற்ப, மாணவர்களுக்கு உரிய வழிகாட்டுதல்களை தரும் புத்தகங்களை கொள்முதல் செய்து, பள்ளிகள் தோறும் கொண்டு சேர்க்க பள்ளிக்கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.