| ADDED : ஜன 24, 2024 01:19 AM
கோவை:போத்தனுார் வழித்தடத்தில் இயக்கி வந்த பல பஸ்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அதை மீண்டும் இயக்க வேண்டும் என, போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.இதுகுறித்து, போத்தனுார் ரயில் பயனாளர்கள் சங்க பொதுச்செயலாளர் சுப்பிரமணியன் கூறியதாவது: கடந்த சில ஆண்டுகளாக, கோவையில் இருந்து போத்தனுாருக்கு பஸ்கள் சரி வர இயக்கப்படுவதில்லை. குறிச்சி பிரிவு போத்தனுார் சாலையில் பாதாள சாக்கடை பணிகள் நடந்து வருவதை காரணம் காட்டி, பஸ்கள் இயக்கப்படாமல் இருந்தன.ஆனால் இப்போது அந்த பணிகள் முடிவடைந்து, தற்காலிக ரோடு அமைக்கப்பட்டுள்ளன. போத்தனுாரில் இருந்து செட்டிபாளையம் செல்லக்கூடிய சர்ச் ரோடு தற்காலிகமாக அமைக்கப்பட்டு, வாகனங்கள் சென்று வருகின்றன.கடந்த காலத்தில் இயங்கி வந்த 4, 4ஏ, 4 சி, 19 ஏ ஆகிய அரசு மற்றும் தனியார் பஸ்கள் போத்தனுாருக்கு இப்போது இயக்கப்படுவதில்லை. இதனால் மக்கள் போக்குவரத்து வசதி இன்றி பாதிக்கப்பட்டுள்ளனர்.பஸ் இல்லாத காரணத்தினால், அதிக கட்டணம் செலுத்தி ஆட்டோவிலும், டாக்சியிலும் பயணிக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.ராமநாதபுரத்தில் இருந்து போத்தனுாருக்கு வர, பஸ் போக்குவரத்து வசதி இல்லை. ஏற்கனவே இயங்கி வந்த பஸ்களை, உடனடியாக இந்த வழி தடத்தில் இயக்க, அரசு போக்குவரத்து கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.