| ADDED : ஜன 29, 2024 11:24 PM
வால்பாறை:வால்பாறை - ஆழியாறு இடையே 'ரோப்கார்' திட்டம் ஏற்படுத்த வேண்டும் என்று சுற்றுலா பயணியர் கோரிக்கை விடுத்துள்ளனர்.கோவை மாவட்டத்தின் சிறந்த சுற்றுலா தலமாக வால்பாறை உள்ளது. இயற்கை அழகை கண்டு ரசிக்க நாள்தோறும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணியர் வருகின்றனர்.சுற்றுலா பயணியரை மகிழ்விக்க அட்டகட்டி ஆர்க்கிட்டோரியம், காட்சி முனைப்பகுதி அமைக்கப்பட்டுள்ளது. அதேபோல், சின்னக்கல்லார் நீர்வீழ்ச்சி, நல்லமுடி பூஞ்சாலை, நெம்பர் பாறை, சிறுகுன்றா கூழாங்கல் ஆறு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுலா பயணியர் சென்று வர வனத்துறையினர் ஏற்பாடு செய்துள்ளனர்.இது தவிர, பி.ஏ.பி., பாசனத்திட்டதில் உள்ள, சோலையாறு, மேல்நீராறு, கீழ்நீராறு அணைகளையும் சுற்றுலா பயணியர் சுற்றி பார்க்கின்றனர். வால்பாறை நகர் பகுதியில் நகராட்சி சார்பில் படகுஇல்லம், தாவரவியல்பூங்காவும் அமைக்கப்பட்டுள்ளது.சுற்றுலா பயணியர் கூறுகையில், 'பல ஆண்டுகளுக்கு முன், வால்பாறை - ஆழியாறு இடையே 'ரோப்கார்' இயக்கப்பட்டது. சாலை போக்குவரத்து துவங்கப்பட்ட பின், 'ரோப்கார்' கைவிடப்பட்டது.தற்போது, வால்பாறை சுற்றுலா தலமாக மாறியுள்ளதையடுத்து, வால்பாறை - ஆழியாறு இடையே மீண்டும் 'ரோப்கார்' திட்டம் துவங்க வேண்டும். இதற்கு, சுற்றுலாத்துறை சார்பில் சுற்றுலா பயணியருக்கு கட்டணம் நிர்ணயம் செய்தால், அரசுக்கும் வருவாய் பெருகும். சுற்றலா வருவோரும் மகிழ்ச்சி அடைவர்,' என்றனர்.