உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கோயம்புத்தூர் /  மேய்ச்சல் நிலம் பாலை நிலமான கதை

 மேய்ச்சல் நிலம் பாலை நிலமான கதை

வா சகர்கள் வாசிக்க வேண்டிய புத்தகங்கள் குறித்து, வாசித்தவர்கள் தங்களின் வாசிப்பு அனுபவங்களை இங்கு பகிர்ந்து கொள்கின்றனர். சீன எழுத்தாளர் ஜியாங் ரோங் எழுதிய 'ஓநாய் குலச்சின்னம்' என்ற நாவலை, சி.மோகன் தமிழில் மொழி பெயர்த்துள்ளார். இந்த வாரம் இந்த நாவல் குறித்து கவிஞர் அவைநாயகன் பகிர்ந்து கொண்டார். சீனாவின் மங்கோலிய பகுதியில் பல ஆயிரம் ஆண்டுகளாக இருந்து வந்த இயற்கை எழிலும், பசுமை வளமும் நிறைந்த மேய்ச்சல் நில நாகரிகம், சீன புரட்சிக்கு பிறகு அமைந்த அரசால் அழிக்கப்பட்டது. அந்த வரலாற்றை மையமாக வைத்து நாவல் எழுதி இருக்கிறார் ஜியாங் ரோங். கல்லுாரி மாணவர்கள். மலை பகுதிகளுக்கும், கிராமங்களுக்கும் சென்று அங்குள்ள மக்களோடு இணைந்து வாழ்ந்து உழைக்க வேண்டும் என்பது சீன அரசின் உத்தரவாகும். அதன்படி 100 மாணவர்கள் மங்கோலியாவின் தொன்மையான மேய்ச்சல் நிலப்பகுதிக்கு சென்று, தங்கி பணி செய்கின்றனர். அங்கு வசிக்கும் பழங்குடிகள் மற்றும் நாடோடி மக்களிடம் உள்ள பழமையான சிந்தனை, கலாசாரம், சடங்குகள் மற்றும் பழக்க வழக்கங்களை மாற்றி, நவீன வாழ்க்கை முறைக்கு கொண்டு வருவதே சீன அரசின் நோக்கமாகும். அதிக பனிப்பொழிவு உள்ள இந்த நிலப்பகுதியில் மான்கள், ஆடு, மாடு மற்றும் தாவரங்களை உண்டு வாழும் பிற உயிரனங்கள் அதிகமாக உள்ளன. இவைகளுக்கு மத்தியில் மாமிச உண்ணிகளான ஓநாய்களும் அதிகம் வாழ்கின்றன. மக்கள் ஆடு, மாடு வளர்ப்பதை தொழிலாக செய்கின்றனர். அங்கு வந்த 4 மாணவர்கள் தங்கி அரசு உத்தரவுப்படி பணி செய்கின்றனர்.- இருவர் ஆடு மேய்ப்பர்களாகவும், ஒருவன் மாடு மேய்ப்பனாகவும், ஒருவன் குதிரை மேய்ப்பனாகவும் -தொழில் செய்கின்றனர். அந்த நிலத்தின் இயற்கை அழகு அவர்களை வசீகரிக்கிறது. அங்கு வாழ்வதை பெரும் மகிழ்ச்சியாக கருதுகின்றனர். ஜென் சென் என்பவன் ஒரு ஓநாய் குட்டியை எடுத்து வந்து வளர்க்கிறான். அவனுடைய அனுபவங்களில் நாவல் விரிகிறது. அங்கு ஓநாய்கள் இல்லை என்றால் மான்களின் எண்ணிக்கை அதிகரித்துவிடும். மற்ற தாவர உண்ணிகளின் இனப்பெருக்கம் பிரச்னையாகி விடும். ஓநாய்கள்தான் அதை கட்டுப்படுத்துகின்றன. அதாவது, ஆடு, மாடுகளை வாழ்வாதாரமாக கொண்ட பழக்குடி மக்களின் மேய்ச்சல் நிலம், ஓநாய்களால் பாதுக்கப்படுகிறது. அதனால் ஓநாயை தங்களின் குலதெய்வமாகவும், மேய்ச்சல் நில காவலனாகவும், குல சின்னமாகவும் வணங்குகின்றனர். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இயற்கையின் உறைவிடமாக இருந்த மேய்ச்சல் நிலம், சீனப்புரட்சிக்கு பிறகு உருவான அரசு 'மனிதனே பிரதானமானவன்' என்ற மாவோவின் கொள்கைப்படி அழிக்கப்பட்டு, நகரங்களாக மாற்றப்பட்டன. அங்கு வாழ்ந்த லட்சக்கணக்கான உயிரினங்கள் அழிக்கப்பட்டன. அங்கு வாழ்ந்த மக்களின் குலதெய்வமான ஓநாய்கள் முற்றிலும் அழித்து ஒழிக்கபட்டன. பசுமை நிறைந்த அந்த மேய்சல் நிலம், பாலை நிலமாக மாறிவிடுகிறது. மங்கோலிய மேய்ச்சல் நில நாடோடி மக்களின் இயற்கையோடு இணைந்த வாழ்வும், கலாசாரமும் முற்றிலும் அழிந்து விடுகிறது. இயற்கைக்கும் மனிதர்களுக்கு இருந்த பிணைப்பு நவீன வளர்ச்சியால் எப்படி அறுந்து போனது, என்பதை இந்த நாவல் சித்தரிக்கிறது. சீன மொழியில், 2004ம் ஆண்டு வெளியான இந்த நாவல், 40 லட்சம் பிரதிகள் விற்பனையாகி சாதனை படைத்துள்ளது. தமிழில் சி.மோகன் சிறப்பாக மொழிபெயர்த் துள்ளார். இயற்கையையும், இலக்கியத்தை நேசிப்பவர்கள இந்த நாவலை வாசிக்கலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி