| ADDED : ஜூன் 28, 2024 01:09 AM
விருத்தாசலம்: விருத்தாசலம் அருகே ரயில்வே சுரங்கப்பாதை அமைக்க கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்த பகுதியில், கலெக்டர் அருண்தம்புராஜ் ஆய்வு செய்தார்.விருத்தாசலம் அடுத்த இலங்கியனுார் கிராமத்தில் ஆயிரக்கணக்கானோர் வசிக்கின்றனர். இவ்வழியாக விருத்தாசலம் - சேலம் மார்க்கமாக தினசரி ரயில்கள் செல்கின்றன.இதனால் ரயில்களில் சிக்கி உயிரிழப்புகளை தவிர்க்கும் வகையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன், இலங்கியனுார் - வலசை மார்க்கத்தில், ரயில்வே சுரங்கப்பாதை அமைக்கப்பட்டது.இந்நிலையில், இலங்கியனுார் - பிஞ்சனுார் மார்க்கமாக செல்லும் ரயில் பாதையிலும் சுரங்கப்பாதை அமைக்க திட்ட மதிப்பீடு தயாரித்து, விரைவில் பணிகள் துவங்கப்படஉள்ளது. இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, லோக்சபா தேர்தலுக்கு முன் கலெக்டரை நேரில் சந்தித்து மனு கொடுத்தனர். அப்போது, சுரங்கப்பாதை வேண்டாம், ரயில்வே கேட் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு, தேர்தல் முடிந்து நேரில் வந்து விசாரணை நடத்துவதாக கலெக்டர் உறுதியளித்திருந்தார். கலெக்டர் அருண்தம்புராஜ் இலங்கியனுாருக்கு நேரில் சென்று, சம்பந்தப்பட்ட இடத்தை பார்வையிட்டார். அப்போது, கிராம மக்களின் கோரிக்கையை அரசின் கவனத்திற்கு எடுத்துச் சென்று, உரிய நடவடிக்கைஎடுப்பதாக கலெக்டர் உறுதியளித்தார்.