| ADDED : ஜூலை 10, 2024 04:38 AM
மாவட்டத்தின் கடைக்கோடியில் உள்ள திட்டக்குடி நகராட்சிக்கு கடந்த ஓராண்டிற்கு மேலாக கமிஷனர் இல்லை. இதனால் மன்ற கூட்டங்களும் முறையாக நடக்காததால், மக்களின் கோரிக்கைகளை விவாதிக்க முடியவில்லை என கவுன்சிலர்கள் புலம்பி வருகின்றனர். மேலும் நகராட்சியில் மூன்று ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட மின் மயானம், தெப்பக்குளம் சீரமைப்பு, கழிவுநீர் கால்வாய் திட்டம் போன்ற பணிகள் முடியவில்லை.சிறுவர் பூங்கா, ரேஷன் கடை கட்டடங்கள் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படவில்லை. அவசர கதியில் திறக்கப்பட்ட பஸ் நிலையத்தில் குடிநீர், கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் இல்லாமல் பயணிகள் தவிக்கின்றனர். தள்ளுவண்டி, நடைபாதை கடை உள்ளிட்ட சுங்கவரி வசூல் முறையாக நகராட்சிக்கு செல்லாமல், சிலரது பாக்கெட்டிற்கு செல்வதாக குற்றச்சாட்டு உள்ளது.ஒப்பந்த பணியாளர்களுக்கு சம்பளம் முறையாக வழங்காமல், அதிகாரிகள் கமிஷன் கேட்பதாக புகார் எழுகிறது. குடிநீர், தெருவிளக்கு, சாலை, குப்பை அகற்றாதது குறித்து நகராட்சிக்கு சென்று பொதுமக்கள் புகார் தெரிவித்தால், முறையாக யாரும் பதில் சொல்வதில்லை. பொறுப்பு கமிஷனர்களும், நகராட்சிக்கு வராததால் பொதுமக்கள், கவுன்சிலர்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆனால், தலைமை இல்லாததால், அங்கு அதிகாரிகளின் தனது இஷ்டத்திற்கு ஆட்டம் போடுவதாக, கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் புலம்பி தீர்க்கின்றனர். எனவே, புதியதாக உருவாக்கப்பட்ட அந்த நகராட்சியில் கமிஷனர் நியமித்து, மக்கள் பணிகள் தொய்வின்றி நடைபெற மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.