| ADDED : ஜூலை 09, 2024 11:46 PM
கடலுார் : சிதம்பரத்தில் 20 மையங்களில் வரும் 13ம் தேதி டி.என்.பி.எஸ்.சி., குரூப் 1 தேர்வு நடக்கிறது. 6,062 பேர் எழுதுகின்றனர்.தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், டி.என்.பி.சி., குரூப் 1 எழுத்து தேர்வை, வரும் 13ம் தேதி நடத்துகிறது. கடலுார் மாவட்டத்தில் சிதம்பரம் நகரில் மட்டும் இத்தேர்வு 20 மையங்களில் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.சிதம்பரம் நந்தனார் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, நந்தனார் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, அரசு மகளிர் மேல்நிலை பள்ளி, ராமசாமி செட்டியார் மேல்நிலைப் பள்ளி, ஆறுமுக நாவலர் மேல்நிலைப் பள்ளி, ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளி, நிர்மலா மெட்ரிக் பள்ளி, வீனஸ் மெட்ரிக் பள்ளி, காமராஜ் மெட்ரிக் பள்ளி, கீழமூங்கிலடி ராகவேந்திரா கலைக் கல்லுாரி, பி.முட்லுார் அரசு கலைக் கல்லுாரி, அண்ணாமலை பல்கலைக் கழகம் என 12 கல்வி நிலையங்களில், 20 மையங்களில் தேர்வு நடக்கிறது. மொத்தம் 6,062 பேர் தேர்வு எழுத உள்ளனர்.தேர்வு காலை 9:30 மணி முதல் பகல் 12:30 மணி வரை நடக்கிறது. தேர்வு மையத்திற்கு காலை 8:30 மணிக்கு வர வேண்டும். கூடுதலாக காலை 9:00 வரை மட்டுமே அனுமதிக்கப்படுவர். தேர்வு எழுதுபவர்கள் தேர்வாணையம் இணைய தளத்திலிருந்து பதிவிறக்கம் செய்யப்பட்ட தேர்வு அனுமதிச் சீட்டு (ஹால் டிக்கெட்) கொண்டு வரவேண்டும். மேலும் ஆதார் அட்டை, ஓட்டுநர் உரிமம், பான் கார்டு, வாக்காளர் அடையாள அட்டை ஆகியவற்றின் ஏதேனும் ஒன்றினை அடையாள சான்றாக எடுத்து வர வேண்டும்.இத்தகவலை கலெக்டர் அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளார்.