விருத்தாசலம், : மரபு வழி விதைகளை மீட்டெடுத்து மக்களிடம் கொண்டு செல்வதற்காகவும், இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கும் வகையிலும், செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் மற்றும் தமிழ்க்காடு இயற்கை வேளாண் இயக்கம் சார்பில், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலை பள்ளியில், மரபு வழி வேளாண் விதை திருவிழா நேற்று நடந்தது.விவசாயிகள் தற்சார்பு பொருளாதரத்தில் தன்னிறைவு அடைய வேண்டும் என்ற நோக்கத்தில் நடைபெற்ற இந்த விதை திருவிழாவில், கருப்பு கவுனி, கார் குறுவை, கிச்சலிசம்பா, மாப்பிள்ளை சம்பா, துாயமல்லி, போன்ற மரபு ரக நெல் ரகங்கள், தானியங்கள், நாட்டு ரக காய்கறி விதைகள், சிறு தானியங்கள், இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட வலி நிவாரணிகள், கைவினை பொருட்கள், துணி பைகள் மற்றும் விவசாயிகள் கண்டுபிடிப்புகள் காட்சிப்படுத்தப்பட்டன.மேலும், ஒவ்வொரு கிராமங்களிலும் நுாறு ஆண்டுகளுக்கு முன் பயன்படுத்தப்பட்ட பாரம்பரிய நெல் ரகங்களை மீட்டெடுத்தும், மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்தும் விதமாகவும் இந்த விதைத் திருவிழா நடந்தது.இந்த விழாவிற்கு, தமிழ்நாடு இயற்கை வேளாண் இயக்க தலைவர் முருகன் தலைமை தாங்கினார். செந்தமிழ் மரபு வழி வேளாண் நடுவம் ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் வரவேற்றார்.இதில், நுாற்றுக்கும் மேற்பட்ட உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள், இயற்கை விவசாயிகள் தாங்கள் விளைவித்த இயற்கை வழி உணவு பொருட்களை காட்சிபடுத்தி இருந்தனர்.இதில், ஏராளமான பொதுமக்கள் கலந்துகொண்டு, இயற்கை விதை மற்றும் உணவு பொருட்களை ஆர்வமுடன் வாங்கிச் சென்றனர்.