உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் /  பொன்விழா கண்ட ஆண்டார்முள்ளிபள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி

 பொன்விழா கண்ட ஆண்டார்முள்ளிபள்ளம் அரசு மேல்நிலைப் பள்ளி

கடலுார் மாவட்டம், குறிஞ்சிப்பாடி ஊராட்சி ஒன்றியம், ஆண்டார் முள்ளி பள்ளம் கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. இப்பள்ளி கடந்த, 1960 ம் ஆண்டு, ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளியாக துவங்கப்பட்டது. தொடர்ந்து கடந்த, 1997ம் ஆண்டு உயர்நிலைப்பள்ளியாகவும், கடந்த, 2006ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாகவும் தரம் உயர்த்தப்பட்டது. இப்பள்ளியில் ஆண்டார் முள்ளி பள்ளம், காயல்பட்டு, பெரியப்பட்டு, தச்சம்பாளையம், வாண்டையாம்பள்ளம், நயினார் குப்பம், ஆலப்பாக்கம், மேட்டுப்பாளையம், கல்லு கடைமேடு, அய்யம்பேட்டை, புத்திர வலி, பேட்டோடை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த, மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். தற்போது இப்பள்ளியில், 536 மாணவர்கள் படித்து வருகின்றனர். கிராமப்புற மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு இப்பள்ளியில் மாலை 4:00 மணி முதல் 5:00 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதனால் இப்பள்ளியில் 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 வகுப்பு பொதுத் தேர்வுகளில் ஒவ்வொரு ஆண்டும் தேர்வு சதவீதம் அதிகரித்து வருகிறது. இப்பள்ளியில் தேசிய மாணவர் படை நாட்டு நலப்பணித் திட்டம், மாணவர் செஞ்சிலுவை சங்கம், பாரத சாரண சாரணியர் சார்ந்த சேவை இயக்கங்களின் வாயிலாக மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. மேலும் பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் சார்ந்த விழிப்புணர்வு, கிராமங்களில் துாய்மை பணிகள் மேற்கொள்ளுதல், மரக்கன்றுகள் நடுதல், போதை ஒழிப்பு விழிப்புணர்வு போன்ற பொது சேவை நிகழ்வுகள் மூலம், இப்பள்ளி மாணவர்கள் பெருமை சேர்த்து வருகின்றனர். என்.ஐ.டி.,யில் உயர்கல்வி இப்பள்ளியில் கடந்த 2023-24ம் ஆண்டு பிளஸ் 2 படித்த தச்சம்பாளையம் கிராமத்தைச் சேர்ந்த, கண்ணன் மகன் காமேஷ் என்ற மாணவர் திருச்சி என்.ஐ.டி.,யில் இன்ஜினியரிங், 2ம் ஆண்டு படித்து வருகிறார். கிராமப்புற பள்ளியில் இருந்து, என்.ஐ.டி.,யில் படிக்கும் இந்த மாணவர், பள்ளிக்கு பெருமை சேர்த்தது குறிப்பிடத்தக்கது. அறக்கட்டளை முயற்சி பள்ளியின் முன்னாள் மாணவரும், கோதண்டபாணி அறக்கட்டளை தலைவருமான துரை ராமலிங்கம் தனது அறக்கட்டளை சார்பில், பள்ளி மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு, பள்ளிக்கு மின்விசிறி, மோட்டார், பீரோ உள்ளிட்ட பல்வேறு பொருட்களை வழங்கியுள்ளார். மேலும், இப்பள்ளி மாணவர்கள் 10ம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வு எழுதுவதற்கு பூண்டியாங்குப்பம், பரங்கிப்பேட்டை பள்ளிகளுக்கு சென்று தேர்வு எழுதினர். அதனால் தேர்வு மையம் அமைப்பதற்கு அறக்கட்டளை சார்பில் எடுத்த முயற்சியால், இப்பள்ளியில் பொதுத்தேர்வு மையத்திற்கு அனுமதி பெற்று, தற்போது இப்பள்ளியிலேயே மாணவர்கள் பொதுத்தேர்வு எழுதி வருகின்றனர். பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெறும் மாணவ, மாணவிகளுக்கு அறக்கட்டளை சார்பில், பரிசுகள் வழங்குதல், மரக்கன்றுகள் நடுதல், விழிப்புணர்வு பிரச்சாரம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கிறது

நம் பள்ளியில் 'ஹைடெக்' லேப் மூலம் மாணவர்களுக்கு பயிற்சி அளிக்கப்படுகிறது. வாரந்தோறும் ஆன்லைன் தேர்வு நடத்தப்படுகிறது. இதனால் ஒவ்வொரு ஆண்டும், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 தேர்வில் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கிறது. 7 மற்றும் 8 ம் வகுப்பு மாணவர்களுக்கு மத்திய அரசு சார்பில் நடத்தும், 'சிலாஸ்'தேர்வில் குறிஞ்சிப்பாடி தாலுகாவில், நம் பள்ளி மாணவர்கள் தேர்ச்சி பெற்று, 2வது இடம் பிடித்து பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர். கிராமங்களில் இருந்து வரும் மாணவர்களை முன்னேற்றும் வகையில், பள்ளி ஆசிரியர்கள் அனைவரும் ஒன்றிணைந்து, சிறப்பு வகுப்புகள் நடத்துவதால், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பயனுள்ளதாக இருக்கிறது. இதனால் தேர்ச்சி சதவீதம் அதிகரிக்கிறது. ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர்

பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது

எங்கள் கிராம மக்களின் முழு ஒத்துழைப்புடன் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. அதே போல் ஆசிரியர்களின் முழு ஒத்துழைப்பினால், ஆண்டுதோறும் பொதுத்தேர்வில், தேர்ச்சி சதவீதம் அதிகரித்து வருகிறது. அதுமட்டுமின்றி, கிராமப்புற மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு இப்பள்ளி பெரிதும் உதவியாக உள்ளது. ராமு, பெற்றோர் ஆசிரியர் கழகத் தலைவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை