| ADDED : நவ 25, 2025 05:11 AM
நெய்வேலி: என்.எல்.சி., விஜிலென்ஸ் துறை சார்பில் கண்காணிப்பு விழிப்புணர்வு பிரசார நிறைவு விழா நெய்வேலி டவுன்ஷிப்பில் நடந்தது. என்.எல்.சி.,சேர்மன் பிரசன்னகுமார் மோட்டுப்பள்ளி தலைமை தாங்கினார். என்.எல்.சி., விஜிலென்ஸ் துறை முதன்மை கண்காணிப்பு அதிகாரி அப்பாகண்ணு கோவிந்தராஜன், சுரங்கங்கள் மற்றும் செயலாக்கத்துறை (கூடுதல் பொறுப்பு) இயக்குநர் சுரேஷ் சந்திர சுமன், மின் துறை இயக்குநர் வெங்கடாசலம், நிதித்துறை இயக்குநர் பிரசன்னகுமார் ஆச்சார்யா முன்னிலை வகித்தனர். விஜிலென்ஸ் துறை பொது மேலாளர் சித்ரகலா வரவேற்றார். என்.எல்.சி., சேர்மன் பிரசன்ன குமார் மோட்டுப்பள்ளி பேசுகையில், என்.எல்.சி., இந்தியா நிறுவனம் தற்போதைய மின் உற்பத்தித் திறனை முன்று மடங்காக அதிகரித்தல் மற்றும் அடுத்த மூன்று ஆண்டுகளில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தியை ஏழு மடங்கு அதிகரித்தல் போன்ற இலக்குகளை நிர்ணயித்து செயல்பட்டு வருகிறது. இந்த லட்சியமிக்க திட்டங்களை செயல்படுத்தும் போது, என்.எல்.சி., நிறுவனத்தின் அனைத்துச் செயல்பாடுகளிலும் வெளிப்படைத்தன்மை மற்றும் பொறுப்புணர்வு ஆகியவற்றை உறுதிசெய்ய கண்காணிப்பு என்பது மிகவும் இன்றியமையாதது' என்றார். என்.எல்.சி., விஜிலென்ஸ் துறையின் முதன்மை அதிகாரி அப்பாகண்ணு கோவிந்தராஜன் பேசுகையில், 'என்.எல்.சி., இந்தியா நிறுவனத்தின் அனைத்துத் துறைகள், பிற மாநிலத் திட்டங்கள் மற்றும் கூட்டு நிறுவனங்கள் ஆகியவை இந்த பிரசாரத்திற்கு ஒத்துழைப்பு வழங்கியது பாராட்டுக்குரியது' என்றார். துணை பொது மேலாளர் ராஜ்குமார் நன்றி கூறினார்.