| ADDED : நவ 23, 2025 06:36 AM
கடலுார்: கடலுாரில், மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டியில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு, கடலுார், மஞ்சக்குப்பம், செயின்ட்ஜோசப் பள்ளியில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓவியப்போட்டி நேற்று நடந்தது. கலெக்டர் சிபிஆதித்யா செந்தில்குமார் துவக்கி வைத்தார். மாற்றுத்திறன் வகையின் அடிப்படையில், 10 வயதுக்கு கீழ் உள்ளவர்கள், 11 வயது முதல் 18 வயது வரை மற்றும் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள், என வயது அடிப்படையில் மூன்று பிரிவுகளில் செவித்திறன் குறையுடையோர், இயக்கத்திறன் குறையுடையோர், அறிவுசார் குறையுடையோர், மூளை முடக்குவாதத்தினால் பாதிக்கப்பட்டோர், பார்வைத்திறன் குறையுடையோர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டன. இதில் ஒவ்வொரு பிரிவுகளிலும், முதல் மூன்று இடங்களை பிடிக்கும் ஓவியங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, மொத்தம், 36 ஓவியங்கள் மாற்றுத்திறனாளிகள் ஆணையரகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டன. இந்த நிகழ்ச்சியில் கடலுார் ஆர்.டி.ஓ., சுந்தரராஜன், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பாலசுந்தரம், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை முடநீக்கியல் வல்லுனர் சுந்தரவடிவேல் உட்பட பலர் பங்கேற்றனர். போட்டியில் பங்கேற்ற அனைவருக்கும் பங்கேற்றமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டன.