| ADDED : மார் 12, 2024 11:54 PM
பெண்ணாடத்தில் இருந்து கோனுார், தாழநல்லுார் வழியாக தீவளூர் செல்லும் சாலையை பயன்படுத்தி பஸ், லாரி, பள்ளி, கல்லுாரி பஸ், வேன் தினசரி செல்கின்றன. மேலும், நந்திமங்கலம், வடகரை, அருகேரி, எரப்பாவூர், கோனுார், தாழநல்லுார், தீவளூர், சாத்துக்கூடல் உட்பட பத்துக்கும் மேற்பட்ட கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு பெண்ணாடம், விருத்தாசலம், திட்டக்குடி பகுதிகளுக்கு சென்று வருகின்றனர்.தீவளூரில் உள்ள பழவாறு ஓடை தரைப்பாலம் வலுவிழந்ததால் பாலத்தை கடக்க வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். அதைத் தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் ஓடையின் குறுக்கே புதிய மேம்பாலம் கட்டும் பணிகள் துவங்கியது. தற்போது பணிகள் முடிவடைந்த நிலையில் இருபுறமும் உள்ள இணைப்பு சாலைப்பணி இதுவரை நிறைவடையாமல் கிடப்பில் போடப்பட்டுள்ளது. இதனால் பாலத்தில் அருகே உள்ள மண் சாலையில் வாகன ஓட்டிகள் செல்வது தொடர்கிறது.எனவே, தீவளூரில் கிடப்பில் போடப்பட்ட மேம்பாலம் பணியை விரைந்து முடிக்க வேண்டும் என கிராம மக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.