உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / கடலூர் / வேப்பூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருவது  எப்போது?: அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

வேப்பூர் புதிய பஸ் நிலையம் பயன்பாட்டிற்கு வருவது  எப்போது?: அரசு விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள கோரிக்கை

சென்னை-திருச்சி, சேலம்-கடலுார் தேசிய நெடுஞ்சாலைகள் இணையும் இடத்தில் வேப்பூர் உள்ளது. இப்பகுதியிலிருந்து பெரம்பலுார், திருச்சி, அரியலுார், விழுப்புரம், புதுச்சேரி, கள்ளக்குறிச்சி, ஆத்துார், சேலம், சிதம்பரம் பகுதிகளுக்கு போக்குவரத்து சிரமமின்றி எளிதில் செல்ல முடிவதால், தினசரி லட்சக்கணக்கான பயணிகள் வேப்பூர் வந்து செல்கின்றனர். மேலும், வேப்பூரில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சார்ப்பதிவாளர் அலுவலகங்கள், தீயணைப்பு நிலையம், அரசு மருத்துவமனை, 24 மணிநேர அவசர சிகிச்சை மையம், வாரச்சந்தை வளாகம், வங்கிகள் உள்ளதால் சுற்றுப்புற கிராம மக்கள் தங்களின் அன்றாட தேவைகளுக்கு தினசரி வந்து செல்கின்றனர். புதிய பஸ் நிலையம் கடந்த, 40 ஆண்டுகளுக்கு முன் சிமெண்ட் மேற்கூரைகளால் வேப்பூர் பஸ் நிலையம் கட்டப்பட்டது. வேப்பூரின் பொருளாதார வளர்ச்சி, போக்குவரத்து தேவைக்காக புதிய பஸ் நிலையம் கட்டித்தர மக்கள் கோரிக்கை விடுத்தனர். கடந்தஅ.தி.மு.க., ஆட்சியில் ரூ.2.69கோடியில் 7 கடைகள், பாலுாட்டும் அறை, ஓய்வறை, கழிவறை உள்ளிட்ட நவீன வசதிகளுடன் கூடிய புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டது. அதனை, கடந்த2023ல் முதல்வர் ஸ்டாலின் காணொளி மூலம் மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து வைத்தார். பயன்பாடின்றி பஸ் நிலையம் பஸ் நிலையம் திறந்து வைத்து 2 ஆண்டுகளாகியும் பயன்பாடின்றி உள்ளது. கடைகள், கழிவறையை ஏலம் விடாமல் நல்லுார் ஒன்றிய அதிகாரிகள் கிடப்பில் போட்டுள்ளனர். பல மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் பஸ் நிலையத்திற்குள் வராமல் சாலையிலேயே பயணிகளை இறக்கி, ஏற்றி செல்கின்றனர். இதனால், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது. சமூக விரோதிகள் அடாவடி பஸ் நிலையத்தில், பகலில் ரோமியோக்களின் தொல்லையால் பள்ளி, கல்லுாரி மாணவர்கள், பெண்கள் சிரமமடைகின்றனர். வணிக நிறுவனங்களில் பணிபுரியும் பெண்கள் பஸ் நிலையம் செல்ல அச்சமடைவதால், பாதுகாப்பற்ற சூழல் உள்ளது. இரவில், மது குடிப்பது, கஞ்சா விற்பனை உள்ளிட்ட சமூக விரோதிகளின் கூடாரமாக உள்ளது. அதிகாரிகள் அலட்சியம் பழைய பஸ் நிலையத்தை சுற்றி, 20க்கும் மேற்பட்ட கடைகள் ஆக்கிரமிப்பில் உள்ளன. பஸ் நிலையத்தை நம்பி வியாபாரம் செய்து வருவாய் ஈட்டி வரும் தங்களுக்கு, புதிய பஸ் நிலைய கடைகளில் முன்னுரிமை அளிக்க கோரிக்கை விடுத்தனர். இது குறித்து வேப்பூர் தாலுகா அலுவலகத்தில் ஊராட்சி நிர்வாகத்திற்கும், வியாபாரிகளுக்கும் இடையே நடந்த பல கட்ட பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது. சமரச முடிவு கிடைக்காததால் நல்லுார் ஒன்றிய அதிகாரிகளும் கடைகளை ஏலம் விடாமல் கிடப்பில் போட்டனர். வரிப்பணம் வீண் ரூ.2.69கோடியில் கட்டப்பட்ட பஸ் நிலையத்தில் உள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரம் உடைந்தும், ஜன்னல்கள் சேதமடைந்தும் உள்ளன. பஸ் நிலையத்தை சுற்றி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துள்ளன. தனியார் வணிக வளாகங்கள், தனியார் கட்டண கழிவறை வருகையால் அரசுக்கு வருவாய் இழப்புடன், பயன்பாடின்றி உள்ள பஸ் நிலையத்தால் மக்களின் வரிப்பணம் வீணாகிறது. வேப்பூர் பஸ் நிலையம் வந்து பல்வேறு மாவட்டங்களுக்கு செல்லும் லட்சக்கணக்கான பயணிகள், கிராம மக்கள், வியாபாரிகளின் நலன் கருதி, தமிழக அரசு வேப்பூர் பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டுமென பயணிகள், கிராம மக்கள் எதிர்பார்க்கின்றனர். தமிழ்நாட்டின் இதய பகுதியாக சென்னை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையிலுள்ள வேப்பூரில் நவீன வசதிகளுடன் புதிய பஸ் நிலையம் கட்டியும் பயன்பாட்டிற்கு வரவில்லை. பயணிகள் அனைவரும் வேப்பூர் கூட்டுரோட்டிற்கு சென்று பஸ் ஏறி பயணிக்கின்றனர். சிலருக்காக பஸ் நிலையத்தை பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் இருப்பது தவறு. பஸ் நிலையத்தை சுற்றியுள்ள ஆக்கிரமிப்பை அகற்றி, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தால், அப்பகுதியில் பொருளாதார வளர்ச்சி மேம்படும். ரவிக்குமார், ஆசிரியர், அரசு மேல்நிலைப்பள்ளி, வேப்பூர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை