| ADDED : மே 09, 2024 06:09 AM
பாப்பிரெட்டிப்பட்டி : பாப்பிரெட்டிப்பட்டி அருகே, டாஸ்மாக்கில் மது வாங்கும் போது ஏற்பட்ட தகராறில், தனியார் கல்லுாரி உதவி பேராசிரியரை, பாட்டிலால் குத்தியவர் கைது செய்யப்பட்டார்.தர்மபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி அருகே மெணசியை சேர்ந்தவர் அம்ராஜ், 35; இவர் ஊத்தங்கரையிலுள்ள தனியார் கல்லுாரியில் உதவி பேராசிரியராக பணியாற்றி வருகிறார். கடந்த, 7 ம் தேதி இரவில் தன் நண்பருடன் வெங்கடசமுத்திரத்திலுள்ள அரசு டாஸ்மாக் கடையில் மது வாங்க வரிசையில் நின்றிருந்தார். அப்போது சிலர் வரிசையில் நிற்காமல், நேரடியாக சென்று, மது பாட்டில் வாங்கினர். இதை, அம்ராஜ் தட்டிக்கேட்டுள்ளார். இதில் ஆத்திரமடைந்த பாப்பிரெட்டிப்பட்டி காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த சென்னப்பன், 34, என்பவர், அம்ராஜை, தகாத வார்த்தையால் பேசி, மது பாட்டிலை அம்ராஜ் தலையில் அடித்து உடைத்து, தோள் பட்டையில் பாட்டிலால் குத்தியுள்ளார். இதில் படுகாயமடைந்த அம்ராஜை அங்கிருந்தவர்கள் மீட்டு, பாப்பிரெட்டிப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். புகார் படி, சென்னப்பனை நேற்று காலை பாப்பிரெட்டிப்பட்டி போலீசார் கைது செய்தனர்.