தர்மபுரி,இண்டூர் அருகே, சிக்கன் கடையில் நடந்த தகராறில், கூலித்தொழிலாளியை கத்தியால் குத்தி கொன்றவருக்கு ஆயுள் தண்டனை விதித்து, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிபதி தீர்ப்பளித்தார்.தர்மபுரி மாவட்டம், இண்டூர் அடுத்துள்ள சோம்பட்டியில், மல்லாபுரத்தை சேர்ந்தவர் குமார். சிக்கன் ரைஸ் மற்றும் சிக்கன் கடை நடத்தி வந்தார். கடந்த, 2021- செப்., 25- அன்று கடையில் குமாரின் மனைவி சரஸ்வதி, 39, வியாபாரத்தில் ஈடுபட்டிருந்தார். அப்போது, கடையில் இருந்த கல்லாப்பெட்டியில், 300 ரூபாய் மாயமாகி இருந்தது. இது குறித்து, கடைக்கு வந்திருந்த வாடிக்கையாளரான மல்லாபுரத்தை சேர்ந்த கூலித்தொழிலாளி அண்ணாதுரை, 38, என்பவரிடம் சரஸ்வதி விசாரித்துள்ளார். இதில், கடைக்கு வந்திருந்த சோளபாடியை சேர்ந்த சுந்தரம், 30, என்பவர் தான் கல்லாப்பெட்டி பக்கம் சென்றார், என அவர் கூறியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்து அண்ணாதுரையிடம் தகராறு செய்த சுந்தரம், அவரை கத்தியால் குத்தினார். இதில், பலத்த காயமடைந்த அண்ணாதுரையை, அருகில் இருந்தவர்கள் மீட்டு, தர்மபுரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அன்றிரவு அண்ணாதுரை உயிரிழந்தார். இண்டூர் போலீசார் சுந்தரத்தை கைது செய்தனர். இந்த வழக்கு, தர்மபுரி மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. வழக்கின் விசாரணை முடிவுற்ற நிலையில், குற்றம் சாட்டப்பட்ட சுந்தரத்துக்கு ஆயுள் தண்டனை மற்றும் 5,000 ரூபாய் அபராதம் விதித்து, நீதிபதி மோனிகா நேற்று தீர்ப்பளித்தார்.