| ADDED : ஆக 22, 2024 03:31 AM
வடமதுரை: தமிழ்நாட்டில் சட்டசபை தேர்தல் என்றாலே கடன் தள்ளுபடி வாய்ப்பு உண்டு. வெளியில் அதிக வட்டிக்கு கடன் வாங்குவதை தவிர்த்து அரசு துறைகளின் கிடைக்கும் கடன்களை மக்கள் பெறலாம்'' என வேடசந்துார் தி.மு.க., எம்.எல்.ஏ., காந்திராஜன் கூறினார்.கொல்லப்பட்டியில் மோர்பட்டி, புத்துார் ஊராட்சி பகுதியினருக்காக நடந்த மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு குறைதீர் முகாமை துவக்கி வைத்த அவர் பேசியதாவது: தேர்தல் நேரத்தில் தந்த வாக்குறுதிபடி வேடசந்துார் தொகுதி குளங்களில் காவிரி உபரி நீரை நிரப்பும் திட்டத்தில் எனது முயற்சியால் அதிகாரிகள் மட்டத்திலான பணிகள் முடிக்கப்பட்டு அரசின் இறுதி முடிவிற்காக சென்றுள்ளது. காவிரி நீர் தீர்ப்பாயத்திலும் இதற்கு அனுமதி பெற வேண்டும். இங்குள்ள குளங்களை நிரப்ப 1.25 டி.எம்.சி., போதுமானது. இத்திட்டத்திற்கு ரூ.5000 கோடி நிதி தேவைப்படும். முதல்வர் ஸ்டாலின் பரிசீலித்து முடிவு செய்வார். தமிழ்நாட்டில் தேர்தல் என்றாலே கடன் தள்ளுபடி வாய்ப்பு , யோகம் உள்ளது. எனவே அரசு துறைகளில் உத்தரவாதம் வழங்காமலே கிடைக்கும் கடன் வாய்ப்புகளை பயன்படுத்தி கொள்ளுங்கள். அப்படியே மீண்டும் கட்டும் நிலை வந்தாலும் வட்டி மிகவும் குறைவு. கந்து வட்டி போன்ற அதிக வட்டிக்கு கடன் வாங்கி சிரமப்படாதீர்கள் என்றார்.தாசில்தார் சரவணக்குமார் தலைமை வகித்தார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் தேன்மொழி முன்னிலை வகித்தார். தி.மு.க., ஒன்றிய செயலாளர்கள் சுப்பையன், பாண்டி, நகர செயலாளர்கள் கணேசன், கருப்பன், ஊராட்சி தலைவர்கள் சிவசக்தி, கவுரிமஞ்சுளாதேவிகணேசன், ஒன்றிய கவுன்சிலர் ஈஸ்வரிபாரதி பங்கேற்றனர்.