| ADDED : ஜூலை 02, 2024 05:16 AM
பழநி : பழநி கிரிவீதி ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து நீதிமன்றத்தில் இன்று திண்டுக்கல் கலெக்டர் ஆஜராக வேண்டும் என்ற உத்தரவு காரணமாக ஆக்கிரமிப்பு வீடுகள் நேற்று மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் அகற்றப்பட்டன.பழநி அடிவாரம், கிரி வீதியில் ஆக்கிரமிப்புகள் குறித்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. நீதிமன்ற உத்தரவுகளின் படி பல்வேறு நடைமுறைகள் கடைபிடிக்கப்படுகின்றன. வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டு தற்போது கிரிவீதி 'பளிச்' என உள்ளது.ஆக்கிரமிப்பு அகற்றம் குறித்து திண்டுக்கல் கலெக்டர் இன்று ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை தொடர்ந்து கிரி வீதி அண்ணா செட்டி மடத்தில் உள்ள 160 க்கு மேற்பட்ட ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. குடியிருப்போர் தாங்களாக முன் வந்து வெளியேறினர். இதை தொடர்ந்து நேற்று (ஜூலை 1) மண் அள்ளும் இயந்திரங்கள் மூலம் வீடுகளை இடித்து அப்புறப்படுத்தினர். கிரிவீதியிலிருந்த குடியிருப்புகள், கடைகளும் அப்புறப்படுத்தப்பட்டன.ஆர்.டி.ஓ., சரவணன், தாசில்தார் சக்திவேலன், கோயில் இணை கமிஷனர் மாரிமுத்து உடன் இருந்தனர். டி.எஸ்.பி., தனஜெயன் தலைமையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். தீயணைப்பு, மருத்துவத்துறையினரும் தயார் நிலையில் இருந்தனர்.