| ADDED : ஜூலை 27, 2024 04:57 AM
ரெட்டியார்சத்திரம் : பள்ளி மேலாண்மை குழு மறுகட்டமைப்பில் பெற்றோர்களுக்கான ஒரு விழிப்புணர்வு முகாம் , 4 பிரிவுகளில் தேர்வு கூட்டமும் நடத்தப்பட உள்ளது.இதற்கான அறிவுறுத்தல்களை ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி துறை அனைத்து அரசு பள்ளிகளுக்கும் அனுப்பி உள்ளது. 2009-ல் நிறைவேற்றப்பட்ட கல்வி உரிமை சட்டம் படி 6 முதல் 14 வயது குழந்தைகளுக்கு இலவச கட்டாயக்கல்வியை அடிப்படை உரிமையாக்கி உள்ளது. இச்சட்டம் மூலம் அனைத்து குழந்தைகளுக்கும் தரமான கல்வி கிடைப்பதை உறுதி செய்தல், ஆண்டுதோறும் வளர்ச்சித் திட்டம் தயாரித்து செயல்படுத்தல் போன்றவற்றுக்காக அனைத்து அரசு பள்ளிகளிலும் பள்ளி மேலாண்மை குழு அமைக்கப்படுகிறது. இவற்றை 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை மறுகட்டமைப்பு செய்ய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி 2022ல் ஏற்படுத்தப்பட்ட இக்குழுக்கள் தற்போது மறுகட்டமைப்பு மேற்கொள்ளப்பட உள்ளது.இதற்காக ஆக.2ல் மாவட்டத்தில் உள்ள 1316 அரசு பள்ளிகளில் மறுகட்டமைப்பு குறித்து பெற்றோர்களுக்கான விழிப்புணர்வு முகாம் காலை 10:00 முதல் மதியம் 1:00 மணி வரை நடத்தப்படுகிறது . ஆக. 10ல் 476 அரசு தொடக்கப் பள்ளி , ஆக. 17ல் 471 அரசு தொடக்கப் பள்ளி , ஆக. 24ல் 169 அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி , ஆக. 31ல் 200 அரசு நடுநிலைப்பள்ளிகள் என 4 கட்டங்களில் இதற்கான முகாம் நடக்க உள்ளன.